உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஆர் ரஹ்மான் பாடல்களுக்கு சிறு வயதில் நடனமாடியவன் : யஷ்

ஏஆர் ரஹ்மான் பாடல்களுக்கு சிறு வயதில் நடனமாடியவன் : யஷ்

'கேஜிஎப்' படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் கன்னட நடிகர் யஷ். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'டாக்சிக்' படம் சரியாகப் போகவில்லை. அடுத்து அவர் நடித்துள்ள 'ராமாயணா' ஹிந்திப் படம் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தப் படம் பான் வேர்ல்டு படமாக வெளியாகப் போகிறது. இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யஷ்.

அதன் புதிய டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. அதில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குனர் நிதிஷ் திவாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய யஷ், “நான் சிறுவனாக இருந்த போது ஏஆர் ரஹ்மான் இசையில் வந்த பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறேன். இப்போது அவரது இசையில், இப்படத்தையும் தயாரித்து, நான் நடிக்கிறேன். எனது கனவு நனவாகி உள்ளது” எனத் தெரிவித்து, 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே' என ஒரு வரிப் பாடலையும் பாடினார்.

மேலும், ரஹ்மான் பற்றி பேசுகையில், இப்படம் பற்றிய ஆலோசனையில் ரஹ்மான் சாரிடம் இருந்தது சிறப்பான தருணம். கன்னடர்கள் தந்த பணத்த வைத்துத்தான் தனது முதல் ஸ்டுடியோவைக் கட்டினேன் என்று ரஹ்மான் சார் சொன்னார். பார்ட் டைம் வேலையாக பெங்களூரு வந்து பின்னணி இசை அமைத்து சம்பாதித்தவர் ஏஆர் ரஹ்மான். இந்த மண்ணுடன் ரஹ்மான் அவர்களது தொடர்பு ஆழமானது,” என்ற தகவலையும் பகிர்ந்தார் யஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !