எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க தேடி வந்த ஏழு வாய்ப்புகள் : நிராகரித்த வித்யா பாலன்
இன்னிசை குயில் மறைந்த எம்.எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகிறது. இதில் அவரது வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்கில் நடிக்க வேண்டிய வாய்ப்பு தனக்கு கைவிட்டு போன வருத்தத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டு உள்ளார் வித்யா பாலன்.
அதாவது கடந்த 2012 - 2014 காலகட்டத்திலேயே இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாவதாக இருந்தது. வித்யா பாலன் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தின் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. அப்போது தனக்கு மிகுந்த மன உளைச்சலும், ஏமாற்றமும் ஏற்பட்டதாக வித்யா பாலன் கூறியுள்ளார்.
அது மட்டும் அல்ல 2024ம் ஆண்டு எம்.எஸ் சுப்புலட்சுமி மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு போட்டோ சூட் நடத்தி வெளியிட்டார் வித்யா பாலன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க கோரி அவருக்கு ஏழு இடங்களில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை அனைத்தையும் அவர் மறுத்துவிட்டார். காரணம் தேவையான முறையான அனுமதிகள் பெறப்பட்டால் மட்டுமே இது போன்ற பயோபிக் படங்களில் நடிப்பது குறித்து தன்னால் யோசிக்க முடியும் என்றும் சட்டப்படி அனுமதி கிடைக்காத பட்சத்தில் அந்த படங்களில் நடிக்க முடியாது என்றும் தெளிவாக கூறிவிட்டதாக கூறியுள்ளார் வித்யா பாலன்.