கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி?
'பிக் பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரைச் செல்வி. மேடை நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சின்னத்திரையில் நடித்தார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துவதாகவும், விரைவில் கணவரை பிரிய இருப்பதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்குச் சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. குறிப்பாக பாரதி கண்ணம்மா 2, சின்ன மருமகள் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் முதல் கணவரை பிரிந்தார்.
அதன்பின்னர் பார்த்தசாரதி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட தாமரைச் செல்வி, அவருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களிலும் இருவரும் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் பார்த்தசாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முடிவு இருவரது பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்டதாகவும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் இதுகுறித்து தாமரைச் செல்வி எந்த பதிவையும் வெளியிடவில்லை. உண்மையிலேயே இருவரும் பிரிந்து விட்டார்களா? அல்லது இது ஏதாவது புரமோசன் ஐடியாவா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பார்த்தசாரதியின் பிரிவு அறிவிப்பை நல்ல டிசைனுடன், பின்னணி இசையுடனும் வெளியிட்டிருப்பதால் இது புரமோசன் யோசனையாகவே தோன்றுகிறது.