ராமாயணா படத்தின் ஏஐ டப்பிங் சர்ச்சை : இயக்குனர் நிதேஷ் திவாரி விளக்கம்
இந்தியக் காவியத் திரைப்படமான ராமாயணா : ரைஸ் ஆப் ஏ லெஜண்ட் படத்தின் உலகளாவிய திரையிடல் இன்று காலை லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸில் உள்ள டேவிட் கெபென் திரையரங்கில் நடந்தது. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட படத்தைக் காண்பதற்காக சர்வதேச விமர்சகர்கள், சில இந்திய விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் திரையரங்கில் கூடினர்.
திரையிடலுக்கு முன்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த டப்பிங் குறித்த ஒரு சர்ச்சைக்கு நிதேஷ் திவாரி தெளிவுபடுத்தினார். உதட்டசைவை சரியாகப் பொருத்துவதற்காக மட்டுமே ஏஐ பயன்படுத்தப்பட்டதாகவும், குரல் டப்பிங்கை உண்மையான கலைஞர்களே செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அந்தந்த பகுதி மக்களுக்குக் கதாபாத்திரங்கள் இயல்பாகத் தோன்ற வேண்டும் என்பதற்காகவே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார். ஆங்கிலத்தில் இந்த உலகளாவிய திரையிடல் நடைபெறுவதால், இக்காவியத் திரைப்படம் சர்வதேச பார்வையாளர்களை எவ்வாறு கவர்கிறது என்பதை அறிய அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பியுள்ளது.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். சன்னி தியோல் ஹனுமானாக வருகிறார். நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளனர். இப்படம் நவம்பர் 5ம் தேதி அன்று பல மொழிகள் மற்றும் வடிவங்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.