இடைவெளி ஏன் ? : நந்திதா விளக்கம்
'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுமானவர் நந்திதா ஸ்வேதா. எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி, புலி, கலகலப்பு 2, என மளமளவென நடித்தவர் கடந்த 2 வருடங்களாக தமிழ் பக்கம் வரவில்லை. இந்த நிலையில் தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : 'ரத்தம்', 'ரணம்' படங்களுக்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். எல்லாமே ஒரே மாதிரி ரோல்களாக இருந்ததால் நடிக்கவில்லை. போலீஸ் கேரக்டரில் நடித்தால் வரிசையாக போலீஸ் கேரக்டர்களிலேயே நடிக்கக் கேக்குறாங்க. ஒரு பாட்டுக்கு ஆடினா அதே மாதிரி கேட்டு வாய்ப்புகள் வருது. இதையெல்லாம் தவிர்த்ததால் படங்கள் இல்லாம இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
இடைவெளி விழுந்தாலும் மக்கள் என்னை நன்றாக நினைவில் வைத்திக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை வருஷ அனுபவத்துல 'நந்திதா எப்பவுமே நல்ல படங்கள் தான் செய்வாங்க'ன்னு ஒரு பெயர் வாங்கியிருக்கேன். இதுவே பெரிய சந்தோஷம்தான்.
'அட்டகத்தி' - பூர்ணிமா, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' - குமுதா, 'முண்டாசுபட்டி' - கலைவாணின்னு நடித்த பாத்திரங்கள் இன்னும் நிலைத்து நிற்கிறது. அது மாதிரி கதைகளைத்தான் எதிர்பார்க்கிறேன். இப்போது சசிகுமார் உடன் நடிக்கிற படத்தில் அப்படியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதவிர கன்னட படம் ஒன்றில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறேன். என்கிறார் நந்திதா.