'கடவுள் தந்த பரிசு' படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல் கம்போஸ்: இளையராஜாவிற்கு நன்றி சொன்ன ராமராஜன்
புதுமுக இயக்குனர் காசிமாயன், கதை, திரைக்கதையில் நடிகர் ராமராஜன் 'கடவுள் தந்த பரிசு' படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே அறிவிப்பு வந்தாலும், விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது. ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் வசனம் எழுதுகின்றனர்; நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். நடிகர் செந்தில், நடிகை கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ஒரு பாடலுக்கு ஆறு மாதம் போராடுகிறவர்களுக்கு மத்தியில், கடவுள் தந்த பரிசு திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த ஆறு நாட்களில் ஆறு பாடல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இதனால் இளையராஜாவை, ராமராஜன், இயக்குனர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்தனர்.
இதுபற்றி சமூக வலைதளத்தில் ராமராஜன் வெளியிட்ட பதிவில், ''எனது கடவுள் தந்த பரிசு படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்தும் அடுத்த சில நாட்களிலேயே ரெக்கார்டிங்கையும் முடித்து சிறந்த பாடல்களை தந்திருக்கும் என் அண்ணன் இசைக்கடவுளுக்கு என் நெஞ்சம் மகிழ்ந்த நன்றி! அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவன் நான்...'' எனப் பதிவிட்டுள்ளார்.
'கரகாட்டக்காரன்' ரீ-ரிலீஸ்!
1989 காலகட்டங்களிலேயே பெரும் வசூல் புரட்சி செய்த படம் 'கரகாட்டக்காரன்'. ராமராஜன் நடித்த இப்படம் தற்போது நவீன டிஜிட்டல் மறு உருவாக்கம், சினிமாஸ்கோப், மற்றும் டி.டி.எஸ் (DTS) ஒலி உருவாக்கப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 'கரகாட்டக்காரன்' 37 ஆண்டுகளுகு்கு பின் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.