பிளாஷ்பேக்: திருமந்திரச் சொல்லை திரைப்படத்தின் தலைப்பாக்கி திகைப்பில் ஆழ்த்திய “அன்பே சிவம்”
சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையில் நடிகன் என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல், அது சார்ந்த ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் கொண்டு, நிபுணத்துவம் பெற்று, ஒரு கலைஞானியாகவே பார்க்கப்பட்டு வருபவர்தான் நடிகர் கமல்ஹாசன்.
கதை, கதாபாத்திரம், ஒப்பனை என ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்தி, உலக சினிமா தரத்திற்கு இணையான படைப்புகளை வழங்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பரீட்சார்த்த முறையில் இவர் தந்த கலைப் படைப்புகள் பல உண்டு. அவற்றில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன. சில தோல்வியும் அடைந்திருக்கின்றன. அப்படி ஒரு வித்தியாசமான கதைக் களத்தோடு, அற்புதமான கதாபாத்திரம் மற்றும் ஒப்பனையோடு இவர் வழங்கிய ஒரு கலைப்படைப்புதான் இந்த “அன்பே சிவம்”.
1996ம் ஆண்டு பெண் வேடமேற்று இவர் நடித்து, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து, பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த “அவ்வை சண்முகி” திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் நடிகர் கமல்ஹாசன் சொன்ன கதைதான் இந்த “அன்பே சிவம்”. ஒரு ரயில் பயணத்தின்போது, இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட இருவர் சந்திக்க, ஆரம்பத்தில் சண்டையில் ஆரம்பிக்கும் அவர்களது சந்திப்பு பின் நட்பாக உருவாகி, இறுதியில் ஒருவருக்காக மற்றொருவர் தியாகம் செய்வதாக நிறைவு பெறும் இந்தக் கதையை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தவிர்க்க, பின்னர் மலையாளத் திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனை அணுகினார் நடிகர் கமல்ஹாசன். படைப்பு ரீதியான கருத்து வேறுபாடு காரணமாக அவரும் இத்திட்டத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட, அதன் பின்புதான் இயக்குநர் சுந்தர் சி படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார்.
படத்தின் கதாசிரியராக பணியாற்றியதோடு, 'நல்லசிவம்' என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் மாதவனின் கதாபாத்திரத்திற்கு கமல்ஹாசனின் முதல் தேர்வாக ஆரம்பத்தில் இருந்தவர் மலையாள நடிகர் மோகன்லால். மறைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் இப்படத்தின் வசனங்களை எழுதியிருந்ததோடு, ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார். அதேபோல் படத்தின் நாயகி கதாபாத்திரமான 'பாலசரஸ்வதி' கதாபாத்திரத்திற்கு நடிகை நந்திதா தாஸூம், மெஹருன்னிசா என்ற துணைக் கதாபாத்திரத்திற்கு நடிகை ஷோபனாவும் நடிக்க இருந்த நிலையில், படப்பிடிப்புத் தேதிகள் ஒத்து வராத காரணத்தால் அவ்விருவருக்குப் பதிலாக நடிகை கிரண் ரத்தோடும், நடிகை உமா ரியாஸ{ம் அந்தக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் நாயகி கிரண் ரத்தோடிற்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தவர் பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.
2003ம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படத்தில், கமல்ஹாசன், மாதவன், கிரண் ரத்தோட், நாசர், உமா ரியாஸ், சந்தானபாரதி, சீமா, யூகி சேது, 'பசி'சத்யா, ஆர் எஸ் சிவாஜி, கலைராணி, இளவரசு, முத்துக்காளை என ஒரு பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருக்க, படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தை இயக்கியிருந்தவர் இயக்குநர் சுந்தர் சி. படத்துக்குப் படம் கதையிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி, வித விதமான ஒப்பனைகளில் வந்து வியக்க வைக்கும் நடிகர் கமல்ஹாசனின் அரிய கலைப் படைப்புகள் பலவற்றில் இந்த “அன்பே சிவம்” ஒரு தனித்துவமிக்க திரைப்படம். பொதுவுடமை, மனிதநேயம் ஆகிய இரண்டையும் வலுவாகப் பேசி வெளிவந்து, வசூல் ரீதியாக ஒரு தோல்விப் படமாக அமைந்திருந்தாலும், விமர்சன ரீதியாக இன்றும் கமல்ஹாசனின் 'கல்ட்' அந்தஸ்தைப் பெற்ற பல திரைப்படங்களின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் படமாக இன்றும் நிலைத்து நிற்கும் திரைப்படம்தான் இந்த “அன்பே சிவம்”.