உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உச்சம் தொட்ட திரை பிரபலங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உச்சம் தொட்ட திரை பிரபலங்கள்

சினிமாவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் குழந்தை பருவத்திலேயே சினிமாவிற்கு என்ட்ரி ஆகி, குழந்தை நட்சத்திரமாகவும் புகழ்பெற்று, பின்னாளில் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் வெகு சிலர் மட்டுமே. தமிழ் சினிமா திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து, தங்கள் அசாத்திய திறமையால் வளர்ந்து, பின்னாளில் முன்னணி ஹீரோ / ஹீரோயின்களாக உருவெடுத்து திரையுலகின் உச்சத்தைத் தொட்ட திரை நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.

1. கமல்ஹாசன்

அறிமுகத் திரைப்படம் : களத்தூர் கண்ணம்மா (1960 - தமிழ்)

தனது முதல் படத்திலேயே 'செல்வம்' என்ற சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இதயங்களையும் வென்றார். பிறகு வளர்ந்து ஹீரோவாக அறிமுகமாகி அதிலும் வெற்றி கண்டார். 'உலகநாயகன்' என்ற பட்டத்துடன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகின் இணையற்ற கலைஞராக உருவெடுத்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடகர் என சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

2. ஸ்ரீதேவி

அறிமுகத் திரைப்படம் : கந்தன் கருணை (1967 - தமிழ்)

4 வயதில் முருகப்பெருமான் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் கால் பதித்தார். பாபு, நம்நாடு, பிராப்தம் போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் அன்பைப் பெற்றார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. பிறகு 1980 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து சாதனை படைத்தார். ரஜினி, கமல், அனில் கபூர், அமிதாப் பச்சன் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமையும் பெற்றவர் இவர்.

3. விஜய்

அறிமுகத் திரைப்படம்: வெற்றி (1984 - தமிழ்)

தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 'வெற்றி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், விஜய். அதைத் தொடர்ந்து குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், இது எங்கள் நீதி போன்ற படங்களில் சிறு வயது விஜய்யாக நடித்து கவனத்தைப் பெற்றார். பெரும்பாலும் விஜயகாந்த்தின் சிறு வயது கேரக்டரில் விஜய் தான் நடித்துள்ளார். 1992-இல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட 'டாப் ஹீரோ' ஆகவும், தென்னிந்திய சினிமாவின் மிக உயர்ந்த வசூல் சக்கரவர்த்தியாகவும் உருவெடுத்து இன்று தமிழக முதல்வர் அரியணையிலும் அமர்ந்துள்ளார்.

4. சிலம்பரசன்

அறிமுகத் திரைப்படம் : உறவை காத்த கிளி (1984 - தமிழ்)

தனது தந்தை டி. ராஜேந்தர் படங்களில் கைக்குழந்தையாகவே திரைத்துறைக்கு வந்தவர். என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், தாய்க்குலமே தாய்க்குலமே போன்ற படங்களில் 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகவே டான்ஸ், டயலாக் என தூள் கிளப்பினார். 2002-இல் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறி, நடிகர், இயக்குனர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார்.

5. மீனா

அறிமுகத் திரைப்படம் : நெஞ்சங்கள் (1982 - தமிழ்)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று அழைத்து இவர் நடித்த குழந்தை கதாபாத்திரம் இன்றும் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துப் பெரும் புகழ்பெற்றார். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து இவர் நடித்த த்ரிஷ்யம் படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர் ஹிட். மோகன்லால், மம்முட்டி என தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

6. ஷாலினி

அறிமுகத் திரைப்படம் : என்டே மாமாட்டிகுட்டியாமக்கு (1983 - மலையாளம்) / பந்தம் (1985 - தமிழ்)

மலையாளத்தில் 'பேபி ஷாலினி' ஆக அறிமுகமாகி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரளா மாநில அரசின் விருதை வென்றார். தமிழில் பந்தம், பிள்ளைநிலா, பந்தம், விடுதலை, சங்கர்குரு போன்ற படங்களில் தனது செல்லமான பேச்சாலும் நடிப்பாலும் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார். அனியாத்திப்ரவு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு அதே படம் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக, விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி அசாத்திய வெற்றி பெற்றார். அதன் பிறகு அலைபாயுதே, அமர்க்களம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !