உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பிரபல இயக்குநர்களின் முதல் திரைப்படங்களை அலங்கரித்த முத்தான நட்சத்திர நாயகி

பிளாஷ்பேக்: பிரபல இயக்குநர்களின் முதல் திரைப்படங்களை அலங்கரித்த முத்தான நட்சத்திர நாயகி

குடும்பப் பாங்கான அழகிய உடலமைப்பும், வசீகரிக்கும் முகத் தோற்றமும், தௌ்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பும், ஏற்ற இரக்கங்களோடு வசனம் பேசி நடிக்கும் ஆற்றல் பெற்றவருமாக 1950, 60 மற்றும் 70களில் தமிழ் திரைப்பட ரசிகர்களின் பேராதரவு பெற்ற நடிகையாக வலம் வந்த ஓர் நட்சத்திர நாயகிதான் சி ஆர் விஜயகுமாரி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். மறைந்த இயக்குநர் ஏ பி நாகராஜனின் “நால்வர்”, “மாங்கல்யம்” போன்ற ஓரிரு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்கள் கிடைக்கப் பெற்று, வெள்ளித் திரையில் விஜயம் செய்த இவருக்கு ஒரு நடிகை என்ற அடையாளத்தைத் தந்த திரைப்படமாக அமைந்த திரைப்படம் என்றால் அது “குலதெய்வம்”. தனது கணவரும், நடிகருமான எஸ் எஸ் ராஜேந்திரனுடன் இணைந்து நடிக்கத் தொடங்கிய இவருக்குத் தொடர்ந்து அவருடன் இணைந்தே “பெற்ற மகனை விற்ற அன்னை”, “தெய்வத்தின் தெய்வம்”, “ஆசை அலைகள்”, “நானும் ஒரு பெண்”, “நீங்காத நினைவு”, “அல்லி”, “பச்சை விளக்கு”, “பூம்புகார்”, “உல்லாசப் பயணம்”, “ஆனந்தி”, “காக்கும் கரங்கள்”, “பூமாலை”, “சாந்தி”, “அவன் பித்தனா?” என ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடிக்கும் அரிய வாய்ப்பும் கிடைத்திருந்ததோடு, பின்னாளில் தமிழ் திரையுலகின் தலை சிறந்த இயக்குநர்களாக அவதாரம் கண்ட சிலரது முதல் திரைப்படங்களை அலங்கரித்த நாயகியாகவும் ஓர் அற்புதத்தைச் செய்யும் வாய்ப்புப் பெற்ற நடிகையாகவும் பார்க்கப்பட்டவர்தான் சி ஆர் விஜயகுமாரி.

கல்யாண பரிசு


“ரத்தபாசம்”, “அமரதீபம்”, “மாமன் மகள்”, “எதிர்பாராதது”, “மஞ்சள் மகிமை”, “உத்தமபுத்திரன்”, “மாதர்குல மாணிக்கம்” என பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்து பின், “அமரதீபம்”, “உத்தமபுத்திரன்” ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த “வீனஸ் பிக்சர்ஸ்” நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்து அதன் பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்த இயக்குநர் சி வி ஸ்ரீதரை ஓர் இயக்குநராக அடையாளம் காட்டிய அவரது முதல் திரைப்படம்தான் இந்த “கல்யாண பரிசு”. இந்த திரைப்படத்தின் நாயகியர் இருவரில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை சி ஆர் விஜயகுமாரி.

சாரதா


“எதிர்பாராதது”, “அமரதீபம்”, “உத்தமபுத்திரன்” போன்ற பல படங்களுக்கு அற்புதமான சில பாடல்களை எழுதி, ஒரு பாடலாசிரியராக அடையாளம் காணப்பட்டு பின்னர் “அமரதேவி” என்ற திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதி ஒரு வசனகர்த்தாவாகவும் உயர்ந்து, அதன் பின்னர் “படிக்காத மேதை”, “தெய்வப்பிறவி”, “குமுதம்” போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி புகழ் பெற்றவர்தான் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். கவியரசர் கண்ணதாசனின் சகோதரரான தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனால் ஒரு இயக்குநராக அடையாளம் காணப்பட்டவர்தான் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம்தான் இந்த “சாரதா” திரைப்படம். 1962ல் வெளிவந்த இந்த மாபெரும் வெற்றித் திரைப்படத்தின் நாயகியும் நடிகை சி ஆர் விஜயகுமாரியே.

மணி ஓசை


1960 மற்றும் 70களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தவர்தான் இயக்குநர் பி மாதவன். “அன்னை இல்லம்”, “நீலவானம்”, “எங்க ஊர் ராஜா”, “வியட்நாம் வீடு”, “ராமன் எத்தனை ராமனடி”, “தேனும் பாலும்”, “பட்டிக்காடா பட்டணமா”, “ராஜபார்ட் ரங்கதுரை”, “தங்கப்பதக்கம்” என சிவாஜிகணேசனின் தொடர் வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இவர், பழம்பெரும் இயக்குநர் டி ஆர் ரகுநாத் மற்றும் சி வி ஸ்ரீதர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து அதன் பின்னர் இயக்குநராக உயர்வு பெற்றவர். அந்த வரிசையில் இவர் இயக்குநராக அறிமுகமாகக் காரணமாக இருந்தவரும் தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனே. இவர் தயாரித்து, நடிகர் கல்யாண் குமார் நடிப்பில் 1963ஆம் ஆண்டு வெளிவந்த “மணி ஓசை” திரைப்படம்தான் இயக்குநர் பி மாதவனுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் நாயகியாக இருந்தவரும் நடிகை சி ஆர் விஜயகுமாரிதான்.

ஜீவனாம்சம்


நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 125வது திரைப்படமாக வெளிவந்து, அவரது வெற்றித் திரைப்பட வரிசையில் ஒன்றாக அறியப்பட்ட “சவாலே சமாளி” என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்தான் மல்லியம் ராஜகோபால். இவரை இயக்குநராக அறிமுகப்படுத்திய திரைப்படம்தான் இந்த “ஜீவனாம்சம்”. நடிகர் ஜெய்சங்கர், ஏ வி எம் ராஜன், புஷ்பலதா, சவுகார் ஜானகி ஆகியோர் நடித்திருந்த இந்தத் திரைப்படத்தின் நாயகியாக திரையை அலங்கரித்திருந்தவரும் சி ஆர் விஜயகுமாரியே.

இது தவிர, பிரபல கதை வசனகர்த்தா ஆரூர்தாஸை இயக்குநராக்கிய “பெண் என்றால் பெண்” என்ற திரைப்படத்தின் நாயகியாக நடித்திருந்தவரும் சி ஆர் விஜயகுமாரிதான். இவ்வாறு தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குநர்களான இவர்களின் முதல் திரைப்படங்களில் எல்லாம் நாயகி கதாபாத்திரம் ஏற்று களம் கண்ட ஓர் அற்புத நட்சத்திர நாயகிதான் நடிகை சி ஆர் விஜயகுமாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !