நன்றி சொல்கிறார் சூர்யா : சிகரெட் சர்ச்சைக்கு பதில் அளிப்பாரா?
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மீடியாவை சந்தித்து சூர்யா பேசுவது இல்லை. பாடல் வெளியீட்டு விழாவில் பேசுவதுடன் சரி. சில ஆங்கில மீடியாவுக்கு மட்டும் பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்த சீன் படம் வெற்றி பெற்றதால், விரைவில் மீடியாவை சந்தித்து வழக்கம்போல் நன்றி தெரிவிக்கிறார். கடந்த முறை கருப்பு வெற்றிக்கும் அதைதான் செய்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் விரிவாக பேசவில்லை.
இந்நிலையில் சில நாட்களில் சீன் வெற்றிக்கு மீடியாவுக்கு விருந்து அளித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். சீன் படம் வெற்றி அடைந்தாலும் அதில் சூர்யா நடித்த சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
கல்வியில், மாணவர்கள் நலனில் கவனம் செலுத்தும் சூர்யா அந்த காட்சியில் நடிக்கலாமா? கதைக்கு தேவை என இயக்குனர் சொன்னாலும் தயாரிப்பாளரான சூர்யா அதை மறுத்து இருக்கலாமா? மாணவர்கள் வளர்ச்சி குறித்து அவ்வளவு பேசுபவர் அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாமே? என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால், இந்தமுறை நன்றி அறிவிப்பு விழாவில் அந்த காட்சி குறித்து சூர்யா விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.