ஸ்ருதி ஹாசனின் மும்பை வீட்டு அமானுஷ்ய அனுபவம்!
நேஹா தூபியா மற்றும் அங்கத் பேடி தொகுத்து வழங்கும் டபுள் டேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ருதி ஹாசன், தனது வாழ்க்கையில் நடந்த சில அமானுஷ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், எனது மும்பை இல்லத்தில் பியோனா என்று தான் பெயரிட்டு வைத்திருந்த ஆளுயர பொம்மை மர்மமான முறையில் தானாகவே இடம் மாறியதாக அவர் கூறியுள்ளார். எந்தவொரு தர்க்கரீதியான காரணமும் இன்றி, அந்த பொம்மை ஒரே இடத்தில் நிற்காமல் வெவ்வேறு நிலைகளில் திரும்பியிருந்ததாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
மேலும், தன்னால் எப்போதும் ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை அல்லது அமைதியற்ற ஆற்றலை உணர முடியும் என்றும், தனது மும்பை வீட்டில் அத்தகைய உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார். ஒரு இடத்தில் விசித்திரமான ஆற்றல்கள் இருந்தால் அதை அறியும் திறன் எனக்கு எப்போதும் உண்டு. இது எல்லா நேரங்களிலும் நடக்காது. ஆனால் சில சமயங்களில் நடக்கும். சென்னையில் உள்ள எனது வீட்டில் மிகவும் சமநிலையான ஆற்றல் உள்ளது. ஆனால், எனது மும்பை வீட்டில் ஏதோ சந்தேகத்திற்கு இடமான ஒன்று நடப்பதாக நான் உறுதியாக உணர்ந்தேன் என்று கூறியுள்ள ஸ்ருதிஹாசன், இறுதியில் அந்த பொம்மையை அப்புறப்படுத்த முடிவு செய்து, அனுமன் சாலிசா பாராயணம் செய்து, கையில் உப்பை வைத்துக்கொண்டு, அந்த பொம்மையைப் பிரித்து அப்புறப்படுத்திய பிறகே வீட்டைப் பூட்டியதாகத் தெரிவித்தார். 2007ம் ஆண்டு வெளியான 'ஐ ஆம் லெஜண்ட்' படத்தில் பொம்மைகள் மர்மமான முறையில் நகர்வதைப் போலவே இது இருந்ததாக கூறியுள்ளார்.
அதே உரையாடலில், தனது ஆன்மிக நம்பிக்கைகள் குறித்தும் பேசிய ஸ்ருதிஹாசன், நாத்திகக் குடும்பத்தில் வளர்ந்த போதிலும், தனது குடும்பத்தில் ஆன்மிக நம்பிக்கை கொண்ட ஒரே நபர் தான்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்கா மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகளில் தனக்குள்ள ஆர்வத்தைப் பற்றியும், அது பெண் முன்னோர்களின் வரலாறு மற்றும் ஆன்மிக அனுபவங்களை நோக்கித் தன்னை ஈர்த்ததாகவும் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
கடைசியாக, ரஜினியின் 'கூலி' படத்தில் நடித்திருந்த ஸ்ருதி ஹாசன், அடுத்ததாக துல்கர் சல்மானுடன் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.