எனது காதல் கடிதம் : டொவினோ தாமஸிற்கு நன்றி தெரிவித்த சூர்யா
தீபாவளி ரிலீஸ் ஆக சூர்யா, நஸ்ரியா நடித்த ‛சீன்' திரைப்படம் வெளியானது. மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிய இந்த படத்தில் மலையாள இளம் நடிகர் நஸ்லேன் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, படம் பார்த்தவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக இன்னொரு மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் கொஞ்ச நேரமே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் டொவினோ தாமஸுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இருவரும் சிறையில் சந்திக்கும் ஒரு வீடியோ கிளிப்பையும் அவர் அந்த பதிவில் இணைத்துள்ளார்.
அன்பு டொவினோ, எங்கள் விக்டர் கதாபாத்திரமாக மாற நீங்கள் சம்மதித்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. நீங்கள் காட்டிய அன்பும் பெருந்தன்மையும் எனது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, மலையாளத் திரையுலகை சேர்ந்த எனது அருமையான சக நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என பலரும் சீன் படத்தில் எங்களோடு பயணித்ததற்கு நன்றி. இது மலையாள திரை உலகிற்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஒரு சிறிய காதல் கடிதம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.