'ராக்கா' படம் குறித்து மனம் திறந்த அல்லு அர்ஜூன்! ரசிகர்களிடம் கூறியது என்ன?
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில், உருவாகி வரும் 'ராக்கா' படம் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் அல்லு அர்ஜூன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ராக்கா படம் குறித்துப் பேசிய அவர், இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுத்துக் கொள்கிறது என்பது தனக்குத் தெரியும் என ஒப்புக்கொண்டார். படம் வெளியாகும்போது எந்தவொரு விமர்சனத்திற்கும் இடமளிக்காத வகையில் மிகச்சிறந்த படைப்பாக அதைக் கொடுக்க படக்குழு விரும்புவதாக அவர் கூறினார். மேலும், ரசிகர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க படக்குழு கடுமையாக உழைத்து வருவதாகவும், ரசிகர்கள் சற்று பொறுமையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்ட அவர், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த படைப்பைத் தருவோம் என உறுதியளித்தார்.
மேலும், 'ஆகாசம்லோ ஒக தாரா' படக்குழுவினருக்கும் அல்லு அர்ஜூன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பவன் சாதினேனி இயக்கியுள்ள இப்படம், 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லைட் பாக்ஸ் மீடியா, ஸ்வப்னா சினிமாஸ், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.