தனக்கு பந்து வீச வருமாறு ரன்வீர் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் அழைப்பு
கடந்த 1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 2021-ல் இதை மையப்படுத்தி '83' என்கிற பெயரில் ஹிந்தியில் படமும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். மும்பையில் நடந்த 'குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ரன்வீர் சிங்கை வெகுவாகப் பாராட்டினார்.
மேடையில் அவர் பேசும்போது, கபில்தேவ் வேடத்தை மிகக் கச்சிதமாகச் செய்திருந்தீர்கள். படத்தில் நீங்கள் வேகப்பந்து வீசியிருந்தீர்கள் இல்லையா ? நான் விளையாட்டாகச் சொல்லவில்லை, அதை மிகச் சரியாகச் செய்திருந்தீர்கள். எப்போதாவது வலைப் பயிற்சிக்கு வந்து எனக்கும் பந்து வீசுங்கள் என ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அதற்கு ரன்வீர் சிங் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.