எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்திற்காக கர்நாடக சங்கீதம் கற்கும் ராஷ்மிகா
தெலுங்கு திரையுலகில் அவ்வப்போது புகழ்பெற்ற திரைக் கலைஞர்களின் பயோபிக்கை சினிமாவாக எடுத்து வருகிறார்கள். அப்படி சாவித்திரியின் கதை மகாநடி என்கிற பெயரில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வகையில் பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த கர்நாடக இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு தற்போது எம்.எஸ். லெகஸி ஆன் ஸ்கிரீன்' என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கவுதம் தின்னனூரி இயக்குகிறார். எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்க தொடங்கியுள்ளதாக சமீபத்தில் கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. பாடுவது என்பது தனக்கு முற்றிலும் புதிய விஷயம் என்றும் வெறுமனே நடிப்பதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை ஏமாற்றாமல் உண்மையாகவே அந்த இசை வடிவத்தை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.