நுாறு சாமி
தயாரிப்பு : விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன்
இயக்கம் : சசி
நடிப்பு : விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான், சக்தி, காவ்யா அனில், பாடினிகுமார்
ஒளிப்பதிவு : தர்ஷன் கிர்லோஷ்
இசை : பாலாஜி ஸ்ரீராம்
வெளியான தேதி : ஜூன் 19, 2026
நேரம் : 2 மணிநேரம் 11 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5
திருமண வயதில் இருக்கும் இரண்டு மகன்கள், 26 வயதிலேயே கணவனை இழந்த தாய்க்கு 42 வயதில் மறுமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். அதற்கு தாய் சம்மதித்தாரா? ஊரில் என்னென்ன பிரச்னைகள்? தடைகளை மீறி அந்த திருமணம் நடந்ததா? இதுதான் சசி இயக்கிய நுாறுசாமி படத்தின் கரு. கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமம் ஒன்றில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார் சசி. தாய் ஆக ஸ்வாசிகா, அவரின் மகன்களாக அஜய் திஷான் சக்தி நடித்து இருக்கிறார்கள். ஸ்வாசிகாவை திருமணம் செய்ய வருபவர் விஜய் ஆண்டனி.
தமிழ் சினிமாவில் விதவை திருமணம் குறித்து பேசிய படங்கள் பல. மகன்களே அம்மா திருமணத்துக்காக போராடும் இந்த கதை அதில் புதுசு. தவிர, இந்த படம் திருமணத்தை மட்டுமல்ல, இளம் விதவைகளின் மன போராட்டம், சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள், வலி, வேதனை என பல விஷயங்களை பெண்களின் பார்வையில் உணர்வுபூர்வமாக பேசுகிறது. ஆண்களை சிந்திக்க வைக்கிறது. அதற்கு உயிர் கொடுத்து செல்வியாக வாழ்ந்திருக்கிறார் ஸ்வாசிகா.
சின்ன வயதிலேயே கணவனை இழந்து, 17 ஆண்டுகளாக, 2 மகன்களுக்காக கஷ்டப்பட்டு, அவர்களை படிக்க வைத்து ஆளாக்குகிறார். விவசாய கூலியாக, டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்பவராக அந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக, மனரீதியாக ஏகப்பட்ட தொல்லைகளை சமாளிக்கிறார். சொந்த குடும்பம் கூட அவருக்கு துணை நிற்கவில்லை. அந்த இடங்களில் அக்மார்க் கள்ளக்குறிச்சி வளையாபட்டு கிராமத்து மனுஷியாகவே தெரிகிறார். அவரின் கெட்அப் , கோபமான பேச்சு, சற்றே திமிரான உடல்மொழி, தனது ஆசைகளை, உணர்வுகளை சொல்லும் இடங்கள் கதையை நம்முடன் ஒன்ற வைக்கிறது. க்ளோசப் காட்சிகளில், திருமணத்துக்கு மறுத்து மகன்களுடன் சண்டைபோடும் இடங்களில், மகன்களை பிரிந்தால் அவர்களுக்கு யார் சாப்பாடு போடுவார்கள் என கதறும் இடங்களில், விஜய் ஆண்டனியுடன் பேசும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். அவர் பேசும் டயலாக்குகள் பல பெண்களின், கணவனை இழந்து தவிக்கும் அந்த பெண்களின் பாசக்கார உறவுகளின் குரலாகவே இருக்கிறது. செல்வி கேரக்டர் சினிமாவில் மட்டுமல்ல, பலரின் நிஜ வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மூத்த மகனாக வரும் அஜய் திஷன், இளைய மகன் சக்தி இருவரும் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள். இருவரின் காதல் காட்சிகள் இன்னொரு லைட் வெயிட் டிராக். ஸ்வாசிகா அண்ணனாக வரும் கருணாஸ் பாசத்தை பொழிந்து, கிளைமாக்ஸ்க்கு முந்தைய ஒரு இடத்தில் இன்னொரு முகம் காண்பித்து இருக்கிறார். வில்லனாக வரும் பாலாஜி சக்திவேல், அஜய் திஷன் காதலி காவ்யா அப்பாவாக வரும் பக்ஸ், அம்மா வினோதினி ஆகியோர் செயற்கை தனமான நடிப்பில் படத்தை பின்னோக்கி இழுத்து இருக்கிறார்கள். ஒன்றிரண்டு சீனில் வந்து அட்வைஸ் செய்து இருக்கிறார் லிஜோ மோல்.
கிட்டதட்ட கவுரவ வேடம் என்றுதான் சொல்ல வேண்டும், இடைவேளைக்குபின் கொஞ்சம் நேரம் கழித்து வருகிறார் விஜய் ஆண்டனி, அவரின் அறிமுகம், அவர் செய்கிற விஷயங்கள், வெள்ளந்தியான பேச்சு, நடவடிக்கைகள் படத்துக்கு பிளஸ். ஒரு கிராமத்து வாழ்க்கையை, ஒரு குடும்ப பிரச்னையை யதார்த்தமாக காண்பித்து இருக்கிறது தர்ஷன் ஒளிப்பதிவு. பாலாஜி ஸ்ரீராம் இசையில் அம்மா அம்மா, மாயகனவோ பாடல் மனதில் நிற்கிறது.
நுாறுசாமி படத்துக்கு பெரிய பலம் வசனங்கள், அதிலும், ஸ்வாசிகா குரலாக, அவர் மனசாட்சியாக பேசும் இடங்கள் சாட்டையடி. சிறுவயதில் கணவனை இழந்த பெண்களின் நிலையை, அவர் சந்திக்கும் பிரச்னைகளை, அவர்களின் மன உணர்வை ஆங்காங்கே சின்ன, சின்ன வசனங்களால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் சசி. அவர் கேட்கிற கேள்விகள் , பேசுகிற விஷயங்கள் அடிமனதில் பதியும். ஸ்வாசிகா வீடு, அந்த பேன், கிராமம், அங்குள்ள மனிதர்கள், பேச்சு ஆகியவை வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை கதை என்பதால் அதிக பில்டப் இல்லை. ஆனாலும், முதற்பாதியில் சுவாரஸ்யம் குறைவு. இடைவெளிக்கு பின்னர்தான் கதை வேகம் எடுக்கிறது. இப்படிப்பட்ட கதைகளை ஒரு சீரியஸ் டோனில் சொல்லியிருக்கலாம். இடையில் காமெடி, மகன்களின் காதல், யூடியூப் பைத்தியம், போலீஸ் என பல விஷயங்களை கலந்து கமர்ஷியல் ஆக்க முயற்சித்து இருக்கிறார் சசி. அது சோர்வை தருகிறது. பன்றிமுட்டுவது, கிணறு போன்ற இடைவேளை காட்சியும் ஒட்டவில்லை. ஒரு புரட்சிகர விஷயத்தை பேசும் கிளைமாக்ஸ் மனதை பாதிக்கும்வகையில் இருந்து இருக்க வேண்டும். அங்கேயும் சினிமாதனம், டிரோன், அடிதடி, காமெடி, ஷூட்டிங் என கெடுத்து இருக்கிறார்கள். முக்கிய இடத்தை மிஸ் பண்ணிட்டீங்களே சசிசார் அது ஒரு வித உண்மை தன்மையை குறைக்கிறது. ஆனாலும் கணவனை இழந்த நுாற்றுக்கணக்கான பெண்களுக்காக, அவர்களின் மறுமணத்துக்காக துணிந்து குரல் கொடுத்த சசி நுாறுசாமி படத்தை நுாறுரூபாய் டிக்கெட் வாங்கி தாராளமாக பார்க்கலாம்.
நுாறுசாமி - பெற்ற தாயை சாமியாக பார்க்க வேணாம், மனுஷியாக பாருங்க என்ற கரு யோசிக்க வைக்கிறது.