மொத ராத்திரி
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் : ராஜா கருப்பசாமி
நடிப்பு : ரிஷிகாந்த், அனிஷ்மா, சேத்தன், அப்துல்லீ, பகவதிபெருமாள், ஏ.வெங்கடேஷ்
ஒளிப்பதிவு : சுரேந்திரன் பரஞ்சோதி
இசை : பரத்சங்கர்
வெளியான தேதி : ஆகஸ்ட் 21, 2026
நேரம் : 2 மணிநேரம் 23 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
காதல் தோல்வி காரணமாக துபாய்க்கு சென்றுவிட்டு, சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் திரும்பும் ஹீரோ ரிஷிகாந்த்துக்கு அன்றே திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேசமயம், மணப்பெண் அனிஷ்மா திருமணத்தன்றே காதலனுடன் ஓடிப்போக திட்டமிடுகிறார். ஆனாலும் தடைகளை மீறி திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்தால் அடுத்து வருவது முதல் ராத்திரி தானே. மணமக்கள் இருவரும் அந்த அறைக்குள் செல்கிறார்கள். அங்கே முதல் ராத்திரி நடந்ததா? ஹீரோ காதல் தோல்வி, ஹீரோயினுக்கு தெரிந்ததா? காதலுடன் மணமகள் ஓடிப் போனாரா? சொந்தங்கள் கூடியிருக்கும் அந்த திருமண வீட்டில் வேறென்ன அலப்பறைகள் நடந்தன? இதுதான் ராஜா கருப்பசாமி இயக்கி இருக்கும் ‛மொத ராத்திரி' படக்கதை. மணப்பெண்ணின் காதலனாக இயக்குனரே நடித்து இருக்கிறார்.
தலைப்பை படித்துவிட்டு வேறு மாதிரி கதை என்று நினைக்க வேண்டாம். இது, துாத்துக்குடி மாவட்ட கிராமத்து பின்னணியில் நடக்கும் பக்கா காதல் கலந்த கலகல குடும்ப கதை. காலையில் திருமண வீட்டில் கதை தொடங்கி, மொத ராத்திரியில் விரிவடைந்து, மறுநாள் காலையில் முடிந்து விடுகிறது. ஒரு கிராமத்து திருமண வீடு எப்படி இருக்கும், சொந்தங்கள் ஒரே இடத்தில் கூடும்போது என்னென்ன சந்தோஷங்கள், பஞ்சாயத்துகள், எப்படி எல்லாம் ஈகோ சண்டைகள் கிளம்பும் என சினிமாதனம் இல்லாமல் வெகு இயல்பாக படத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர். ஹீரோவுக்கு திருமணத்தில் விரும்பம் இல்லை, ஹீரோயினுக்கு ஓடிப்போகிற மனநிலை என்றவுடன் இன்னும் சூடுபிடிக்கிறது.
ஹீரோவாக நடித்துள்ள ரிஷிகாந்த் வேண்டா வெறுப்பாக திருமணத்துக்கு சம்மதித்து, வேறு மனநிலையில் முதல் ராத்திரி அறைக்குள் செல்கிறார். அங்கே ஹீரோயின் வேறு மனநிலையில் இருப்பதை அறிந்து, சில விஷயங்கள் செய்கிறார். அவருக்கு உதவுகிறார். ஹீரோயிசம், பில்டப் இல்லாமல் ஒரு இயல்பான இளைஞனாக பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக, முதல் ராத்திரி அன்று ஹீரோயின் ஓடிப்போக நினைக்க, அவர் முகம் மாறுவது, தவிப்பது, பொங்குவது சூப்பர். இடைவேளைக்குபின் அவர் கேரக்டர், பேச்சில் நிறைய மாற்றங்கள். சில சீன்களில் இன்னும் ஸ்கோர் செய்து இருக்கலாம்.
சிறை, யூத் படங்களில் நடித்த அனிஷ்மா அனில்குமார் இந்த படத்திலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். காதலன் தன்னை அழைத்து செல்ல வருவான் என நினைத்து தவிப்பது, முதல் ராத்திரியில் ஓடிப்போக முயற்சிப்பது, அடுத்து நடக்கும் சில விஷயங்கள் என படம் முழுக்க சின்ன, சின்ன எக்ஸ்பிரஷனில் கைதட்டல் வாங்குகிறார். அவரின் முகபாவம், வேகமாக பேசும் மேனரிசம், கோபம் என எல்லாமே சூப்பர். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையை அவர் ப்ரோ என அழைக்க, தியேட்டரே அதிர்கிறது. மணப்பெண்ணாக அவர் தவிப்பது, காதலுனுடன் போனில் சண்டைபோடுவது கியூட். கிளைமாக்சிலும் பல பெண்களில் குரலாக நல்ல வசனங்கள் பேசுகிறார். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஹீரோயின் விருது பட்டியலில் அனிஷ்மா பெயரையும் சேர்க்கலாம்
துாத்துக்குடி மாவட்ட கிராமத்தில் கதை நடக்கிறது. திருமணம் என்றால் இரண்டு வீட்டு தரப்பில் ஏகப்பட்ட உறவினர்கள் கூடியிருப்பார்கள் தானே. அதை கதைக்கு அழகாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஹீரோ மாமாவாக வரும் அப்துல்லீ, ஹீரோயின் உறவினராக வரும் பகவதி பெருமாள், ஹீரோ அப்பா ஏ.வெங்கடேஷ் மற்றும் ஹீரோயின் அம்மா ஷெல்லி, ஹீரோ அம்மா, அக்கா, உறவினர்கள் என பலரும் நம் குடும்பங்களில் பார்க்கும் உறவு பெண்களை போல, அவ்வளவு இயல்பாக நடித்து இருக்கிறார்கள். வம்பு இழுக்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள். குறிப்பாக, அந்த பெண்கள் சம்பந்தப்பட்ட கிண்டல், சண்டை சீன்கள் படத்துக்கு அவ்வளவு பிளஸ். நம் வீடுகளில் நடந்த திருமணங்கள், விசேஷ நிகழ்ச்சிகள், உறவினர்கள் நினைவுக்கு வருவார்கள்.
முதல் ராத்திரி நடக்கும் அறைக்கு வெளியே அவர்கள் படுத்துக்கொண்டு அடிக்கிற லுாட்டிகள், பேசுகிற வசனங்கள், ஒரு கட்டத்தில் குடும்பத்தில் சண்டைவரும்போது நடந்து கொள்ளும் விதம், வார்த்தை போர்கள் ரசிக்க வைக்கின்றன. அதேசமயம் குடும்பத்துக்காக தங்கள் கனவை, வேலையை விட்டு கொடுத்துவிட்டு, திருமணம், குழந்தைகள் என வாழும் அந்த பெண்கள் பேசும் டயலாக் பீல் பண்ண வைக்கிறது. அதை கேட்டு, கடந்த காலத்தை நினைத்து பல பெண்கள் கண் கலங்குவது நிச்சயம். ஹீரோ மாமாவாக வரும் அப்துல்லீ ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடி பண்ணி, கதையை விறுவிறுப்பாக்கி இருக்கிறார். பூசாரியாக வரும் சேத்தன் கேரக்டரும் வித்தியாசமானது.
இயக்குனரே ஹீரோயின் காதலனாக வருகிறார். அவர் கேரக்டர் படு சுவாரஸ்யம், கையில் காசு இல்லாமல் மணப்பெண் தேடி செல்வது, இடையில் அவர் சந்திக்கிற பிரச்னைகள், வெகுளியாக நடந்து கொண்டு வாங்குற அடி, கடைசியில் ஒரு முடிவு எடுப்பது படத்தை கலகலப்பாக்கி, பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. திருமண மண்டபம், கிராமம், மணமகன் வீட்டில் அதிக சீன் நடக்கிறது. அதை இயல்பாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன், பரத்சங்கர் இசையும் சீன்களை வேகப்படுத்தி இருக்கிறது. அந்த கல்யாண மண்டப பாடல் ஓகே.
முதல் பாதியில், இரண்டாம் பாதியில் சில சீன்கள் இழுக்கிறது. அந்த நெல்லை வட்டார மொழி சிலருக்கு புரியாமல் இருக்கலாம். பெண்கள் சண்டையை குறைத்து இருக்கலாம். இடைவேளைக்குபின் சேத்தன் சம்பந்தப்பட்ட சீன்களில் கத்தரி போட்டு இருக்கலாம். சில குறைகள் இருந்தாலும் கிட்டத்தட்ட கே.பாக்யராஜ் பாணியிலான திரைக்கதை டச்சிங். அதை அவர் ஸ்டைலுக்கு இன்னும் டீப் ஆக போகாமல், இரட்டை அர்த்தம், விரசம் இல்லாமல் கிராமம், உறவு, நண்பர்கள் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி. ஒரு பிரஷ் ஆன, இயல்பான கிராமத்து கதை, வேகமான திரைக்கதை, புதுமுகங்கள் அதிகம் நடித்து இருப்பது படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் என எல்லா தரப்பும் ரசிக்கிற மாதிரியான கதை, சீன்கள் மொத ராத்திரியை, அவரவர் முதல் ராத்திரி மாதிரி மறக்க முடியாமல் செய்கிறது. சரி, மணமக்களுக்கு முதல் ராத்திரி நடந்ததா என்று கேட்கிறீர்களா? அது சஸ்பென்ஸ்
மொத ராத்திரி - கிராமத்தில் நடந்த உறவுக்காரங்க கல்யாணத்துக்கு சென்று வந்த உணர்வு