உள்ளூர் செய்திகள்

ஜெயிலர் 2

இயக்கம்: நெல்சன்
நடிப்பு: ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், சுராஜ்வெஞ்சாரமூடு, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, நமோ நாராயணா
ஒளிப்பதிவு: விஜய்கார்த்திக் கண்ணன்
இசை: அனிருத்
வெளியான தேதி: அக்டோபர் 15, 2026
நேரம்: 2 மணி 45 நிமிடங்கள்
ரேட்டிங்: 3 / 5

ஜெயிலர் முதற்பாகத்தில் ரஜினியால் கொல்லப்பட்ட வில்லன் விநாயகன் டீம் கொலை வெறியுடன், ரஜினியை தேடி அலைகிறது. அந்த கொலையை செய்தவரை கண்டுபிடித்து பழிவாங்குவேன் என புது வில்லன் சுராஜ்வெஞ்சாரமூடு உறுமுகிறார். கோவாவில் வசிக்கும் சிலை கடத்தல் டான் குடும்பத்தை சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலனும் தாங்கள் இழந்த பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சிலையை தேடுகிறார்கள். இருவர் பிடியில் சிக்கும் ரஜினிகாந்த் எப்படி தப்பிக்கிறார். எப்படி பதிலடி கொடுக்கிறார். இதுதான் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்2 கதை.

கோவையில் ஒரு சூப்பர் மார்க்கெட் வேலை செய்து கொண்டு மனைவி ரம்யாகிருஷ்ணன், பேரன் ரித்விக், மருமகள் மிர்ணாவுடன் எளிய வாழ்க்கை வாழ்கிறார் ரஜினிகாந்த். அவரை அரசு அதிகாரியான பகவதிபெருமாள், பில்டப் பார்ட்டியான நமோ நாராயணன் ஆகியோர் வம்பு இழுக்க, தனது பாணியில் ரஜினிகாந்த் சில வேலைகளை செய்வதாக படம் தொடங்குகிறது. முதற்பாதியில் காமெடி, கலகல காட்சிகள் அதிகம். வில்லன்கள் சுராஜ்வெஞ்சமூடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் விளையாட, கதை ஆக் ஷனுக்கு மாறுகிறது. வழக்கம்போல் கெஸ்ட்ரோலில் வரும் நண்பர்கள் உதவியுடன், பக்கா பிளான் போட்டு எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் ரஜினிகாந்த் என படம் முடிகிறது. சின்ன கதை என்றாலும் பிளாக் காமெடி, ஆக் ஷன், சில பாடல்கள், பில்டப் சீன் கலந்து ஜெயிலர்2வை பக்கா மாஸ், கமர்ஷியல் படமாக கொடுத்து இருக்கிறார் நெல்சன்

ஆரம்பம் முதல் கடைசிவரை சற்றே வயதான தோற்றத்தில் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் இருக்கிறார் ரஜினிகாந்த். அவர் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால், நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார். குறிப்பாக, பகவதிபெருமாளுக்கும் அவருக்குமான பஞ்சாயத்து சீன், தான் யார் என்பதை மறைத்து நமோ நாராயணனிடம் டிரைவராக வேலை பார்க்கும் சீன், யோகிபாபுவை வம்பு இழுக்கும் சீன் செம. இந்த இடங்களில் தனது ஸ்டைல் பிளாக் காமெடி கலந்து கலகலப்பு ஏற்படுத்தி, பல இடங்களில் நன்றாக சிரிக்க வைத்து இருக்கிறார் நெல்சன். ரஜினி படம் முழுக்க ஏகப்பட்ட ஹீரோயிச பில்டப் சீன், அது அவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். இரண்டாம்பாதியில் டான் எஸ்.ஜே.சூர்யா குடும்பத்துடன் மோதுகிற சீனில், பதுங்குவது போல பாய்கிற சீனில் ரஜினிகாந்த் திட்டம் , நடிப்பும் அருமை.

சில இடங்களில் சின்ன, சின்ன காமெடியில், சில டயலாக்குகளில் அப்ளாஸ் வாங்குகிறார் ரஜினிகாந்த். குறிப்பாக, வில்லி வித்யாபாலன் அழகை ரசிக்கும் இடங்கள், எனக்கு அவங்க போனில் குட்மார்னிங் அனுப்பலை என கலாய்க்கும் இடங்கள், அந்த காபி டயலாக் வாவ். நமோ நாராயணாவை மாட்டிவிட்டு அவர் அமைதியாக இருக்கும் இடங்களும் படத்தில் பிளஸ். ஆரம்பத்தில் ஆக் ஷனில் இறங்காமல் இருப்பவர், ஒரு கர்ப்பிணிக்காக துப்பாக்கி துாக்கிக்கொண்டு களம் இறங்கும்போது தியேட்டரில் விசில் பறக்குகிறது. அதேபோல், கோவாவில் மிதுன்சக்வர்த்தி, அவர் குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட சீனிலும் ரஜினி மாஸ் பண்ணியிருக்கிறார். என்ன, இந்த படத்தில் அவர் அதிகம் டான்ஸ் ஆடவில்லை. அதிகம் சண்டைபோடவில்லை. அதிகம் காமெடி பண்ணவில்லை. தான் அமைதியாக இருந்து மற்றவர்களை ஆட வைத்து, நடிக்க வைத்து அழகு பார்த்து இருக்கிறார். வழக்கமான ரஜினியை எதிர்பார்ப்பவர்களுக்கு , அவர் தீவிர ரசிகர்களுக்கு இதெல்லாம் ஏமாற்றம்

கேரள வில்லனாக சுராஜ்வெஞ்சரமூடும், அவர் பாஸ் ஆக வரும் எஸ்.ஜே.சூர்யாவும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். காமெடி கலந்த வில்லத்தனத்தில், மாறுபட்ட கெட்அப்பில் கவர்கிறார் சுராஜ். அவருக்கும் டம்மி பீஸ் நமோவுக்குமான சீன்கள் இன்ட்ரஸ்ட்டிங். யோகிபாபு சம்பந்தப்பட்ட சீன்கள், அவரின் டயலாக், அவர் மாட்டிக்கொண்டு தவிப்பது ரசித்து சிரிக்க வைக்கிறது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் தனது கேரக்டருக்கு எஸ்.ஜே.சூர்யா பலம் சேர்த்து இருக்கிறார். அழகான ஹீரோயினாக பார்த்த வித்யாபாலன், இதில் சிகரெட் குடித்துக்கொண்டு வில்லியாக வருகிறார். இடைவேளைக்குபின் அவர் வரும் சீன் அமர்களம். அதேபோல் அதிகம் பேசாவிட்டாலும் டான் ஆக வருகிற பிரபல நடிகர் மிதுன்சக்ரவர்த்தி கேரக்டர், நடிப்பும் பிளஸ்.

முதற்பாகத்தில் ஓரளவு நடித்த ரம்யாகிருஷ்ணன், மருமகள் மிர்ணாவுக்கு அதிக வேலை இல்லை. முதற்பாகம் போலவே சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் கவுரவ வேடத்தில் வருகிறார். அதில் சிவராஜ்குமாருக்கு அதிக சீன். கிளைமாக்சில் மோகன்லாலும் முத்திரை பதித்து இருக்கிறார். ஆனாலும், முதற்பாகத்தில் இவர்களுக்கு இருந்த மாஸ், பில்டப் இதில் இல்லை. இந்தி நடிகர் ஹிர்த்திக்ரோஷனும் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம், கெஸ்ட்ரோலில் நடித்த மாஸ் ஹீரோக்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

வில்லன், ஹீரோ மோதல் என்ற வழக்கமான கதை என்றாலும், போராடிக்காமல் கொண்டு செல்கிறார் நெல்சன். இடைவேளைக்குபின் கொஞ்சம் இழுக்கிறது. அதை அடுத்தடுத்த திருப்பங்கள், ரஜினி ஹீரோயிசம், கிளைமாக்ஸ் சரி செய்து விடுகிறது. ரஜினி மகன் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் சீனை குறைத்து இருக்கலாம், இல்லை, இன்னும் உணர்வுபூர்வமாக எடுத்து இருக்கலாம். பேரனை சுற்றிதான் கதை நடப்பதாக போகிறது. ஆனாலும், தாத்தா, பேரன் பாச சீன்கள் குறைவு. ரஜினி படங்களில் பன்ச் டயலாக் அதிகம் இருக்கும். இதில் 50 ஆண்டுகளாக நான் இருப்பது எப்படி தெரியுமா என்ற பன்ச் டயலாக் மட்டுமே ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறது. கிளைமாக்சில் மட்டும் சுருட்டு பிடித்து மாஸ் ஆக வருகிறார். அந்த சுருட்டை தவிர்த்து இருக்கலாமே, சூப்பர்ஸ்டாரே!

அனிருத் பின்னணி இசை, பாடல்கள் படத்தின் இன்னொரு ஹீரோ எனலாம். புதுமையான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பல சீன்கள் அவர் இசையால் உயிர் பெற்று இருக்கிறது. பின்னணி இசை காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பூர்ணா, நேராபதேஹி பாடலும் சூப்பர் ஹிட். அதேபோல் அவ்வளவு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் விஜய்கார்த்திக் கண்ணன். பல பிரேம் பிரமாதம். சேத்தன் டிசோவின் சண்டை பயிற்சியும் கதையை இன்னும் ஸ்பீடு ஆக்கி ரசிக்க வைத்து இருக்கிறது. ரஜினி அதிகம் சண்டைபோடவில்லை. ஆனாலும் ஆக் ஷன் பட பிலீங் வந்துவிடுகிறது.

‛ஜெயிலர் 2' படத்தின் முக்கிய கரு சிலைக்கடத்தல், அந்த கும்பல் பற்றியது. ஆனால் அதை இன்னும் விளக்கமாக சொல்லவில்லை. ரஜினி படம் தான் ஆனால் அவரை இயக்குனர் சிறப்பாக நடிக்க வைக்கவில்லை. அவரின் 50 ஆண்டு சினிமா அனுபவத்துக்கு இன்னும் நல்ல சீன் வைத்து இருக்கலாம்.
முதற்பாகத்தில் சுனில் காமெடி, தமன்னா சாங் பேசப்பட்டது. இதில் அதெல்லாம் மிஸ்ஸிங்.

முதற்பாகத்தில் இருந்த பல கமர்ஷியல் விஷயங்கள், விறுவிறுப்பு இதில் மிஸ்சிங் என்றாலும், ரஜினியை அதிகம் நடிக்க வைக்கவில்லை என்றாலும், ரசிகர்கள், சினிமா பல்ஸ் உணர்ந்து பக்கா திரைக்கதையுடன், காமெடி ஆக் ஷன், கிளாமர், பில்டப், ஹீரோயிசம், விறுவிறுப்பு, திருப்பங்கள் கலந்து ஒரு வெற்றிபடம் கொடுத்து இருக்கிறார் நெல்சன். கிளைமாக்சில் ஜெயிலர்3 பாகத்துக்கும் லீடு கொடுத்து இருக்கிறார். அதில் விஜய்சேதுபதி என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ்.

ஜெயிலர் 2 - ஆயுத பூஜை விருந்து



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (8)

Tamil arasan
2026-10-18 21:00:54

Mr. குருமூர்த்தி. தமிழ் சினிமாவில் ரஜினி மாதிரி உதவி செய்த நடிகர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் கடவுள் அவரை பேரும் புகழோடும் வாழ வச்சுட்டு இருக்கார்.. குரு மூர்த்தி மாதிரி வன்மம் பிடித்த ஒரு குரூப்க்கு ஒரு உதாரணம்.. 1996-ல் திருவண்ணாமலை கிரிவலம் மின்விளக்கு அமைக்க கலெக்டர் வசூல் பண்ண ஆரம்பித்த போது, விசிறி சாமியார் போய் ரஜினியை கேளுனு சொல்ல.. அவர் போய் ரஜினியை பார்க்க ரஜினி 10 லட்சம் செலவில் 170 சோடியம் மின் விளக்கு அமைத்து கொடுத்தார். அப்ப தங்கம் விலை 1 பவுன் 5,200.. இப்ப அதோட மதிப்பு 2 கோடி..முத்து படத்துல வேலை செஞ்ச அனைவருக்கும் தங்கஜெயின் போட்டது..இது மாதிரி நிறைய இருக்கு குருமூர்த்தி உன் போன் நம்பர் கொடு, Rajini help pdf அனுப்பி வைக்குறேன்.. அப்புறம் 2 ராமசாமி நமக்கு தெரியும்.. நடிகர் v k ராமசாமி கடைசி வரை தன் பூஜை அறையில் ரஜினி படம் வைத்து கும்பிட்ட வரலாறு ஒன்று.. ஈ.வெ.ராமசாமி கொள்கைக்கு எதிரா திருநீறு , ருத்ராட்சம் போட பயந்த, கூச்சப்பட்ட, வெட்கப்பட்ட பாமர மக்களை, அதை கம்பீரமா அணிய செய்தவர் ஆன்மீகவாதி ரஜினி.. 2007 ல பெங்களூர்ல பார்த்த ஒரு பிராமணர், நாங்க தமிழ்நாட்டில் வாழவே முடியாத நிலைமை இருந்தது, ரஜினி வந்த பிறகு இந்து மதத்தை படங்களில் காட்டி, தன் ரசிகர்களை ருத்ராட்சம் அணிய வைத்தார். திருப்பதி கோவிலில் திருமணம் செய்து எல்லாரையும் கடவுள் பக்தியை பேச வைத்தார். நடிகர்களில் பிடித்த நடிகர் ரஜினி, ஜெயலலிதா மட்டும்தானு சொன்னார்.. தற்குறி , கொத்தூஸ் எவ்வளவு வன்மம் கொட்டினாலும்.. கடவுள் அருள் உள்ள ரஜினியை ஒன்னும் பண்ணாது. வாழும் சித்தர் ரஜினி. (1996-ல திமுகவுக்கு ஆதரவு தர சோ ஐயா தான் முக்கிய காரணம், சோ ஐயா பேச்சை ரஜினி தட்டவே மாட்டார்)


DMfirst daily
2026-10-18 10:16:55

I really enjoyed the overall entertainment value of Jailer 2. Rajinikanth’s powerful screen presence, stylish action sequences, and impressive dialogue delivery make the movie exciting to watch. Nelson Dilipkumar’s direction blends action, suspense, and humour, while Anirudh Ravichander’s energetic background music adds intensity to several scenes. The supporting also brings extra excitement to the story. Although a few moments feel lengthy, the film delivers plenty of mass entertainment for Rajinikanth fans. Overall, Jailer 2 is an enjoyable action thriller with memorable superstar moments. I would recommend it to fans who love larger-than-life Indian cinema


Ravi Balan
2026-10-17 08:06:39

ஒரு முறை பார்க்கலாம் பெஸ்ட் என்டர்டைன்மென்ட்


Natarajan Ramanathan, தேவகோட்டை
2026-10-16 08:58:01

Sorry. மூன்று மதிப்பெண் ரொம்பவே.... அதிகம்.


muthu raman
2026-10-15 23:03:34

எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டது ஆனால் தியேட்டர் சென்று படம் பார்த்தேன் படம் நன்றாக இருக்கிறது குடும்பத்துடன் பார்க்கலாம் . இதை தவிர்த்து தேவையற்ற விவரங்கள் எதற்கு அவர் நடிப்பதற்கு சம்பளமாகிறார் எதற்காக நமக்கு உதவி செய்ய வேண்டும். என்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியும்...


muthu raman
2026-10-15 23:02:05

நமக்கு பிடிச்ச ஒரு படத்தை பார்க்க போறோம் நாம போய் பார்த்தா மட்டும் தான் அவங்களுக்கு வருமானம் நம்ம ஊரு என்டர்டைமென்ட் அதுக்காக தான் படம் பார்க்க போறோம் அவர் நடிக்கிறார் சம்பாதிக்கிறார் நாலு படம் ஓடல அப்படின்னா வீட்ல இருக்க போறார் இதுல என்ன இருக்கு எதுக்கு இந்த வண்மம் அவர் எதுக்கு செய்யணும் மற்றவர்களுக்கு உதவி...


Gurumoorthy, Chennai
2026-10-15 16:55:41

இதுபோல் நடிகர்களின் திரைப்படத்தை போட்டி போட்டு கொண்டு பார்க்கும் ரசிகர்கள் முதலில் திருந்த வேண்டும்... இவர்கள் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் நமது பணம் என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்... இப்படி எல்லாம் இவர் படம் ஓடினாலும் இந்த தமிழ் மக்களுக்காக இந்த நடிகர் செய்த சாதனைகள் என்ன.... சிந்தித்துப் பாருங்கள்.... பல நடிகர்கள் பலருக்கு பல நன்மைகளை செய்துள்ளனர் ஆனால் இவர் செய்தது இந்த தமிழ் மக்களுக்கு ஒன்றுமே இல்லை.... இதுதான் நிதர்சனமான உண்மை.....


இளந்திரயன் வேலந்தாவளம்
2026-10-16 10:37:57

திரு குருமூர்த்தி சொல்ல வந்தது தவறாக புரிந்து கொள்ள பட்டது என்று நினைக்கிறேன். நடிகர் கர்நாடகாவில் அதிகளவு முதலீடு செய்துள்ளார் தமிழகத்தைவிட என்பதே எவர் சொல்லவந்தது