ஏஒடி (ஆகாயத்தில் ஒரு தாரகை)
தயாரிப்பு : கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட்பாக்ஸ் மீடியா
இயக்கம் : பவன் சதினேனி
நடிப்பு : துல்கர்சல்மான், சாத்விகா, நாசர், ஸ்ருதிஹாசன், ருஹானிசர்மா, ஸ்வாசிகா
ஒளிப்பதிவு : சுஜித்சாரங்
இசை : ஜி.வி.பிரகாஷ்
வெளியான தேதி : நவம்பர் 20, 2026
நேரம் : 2 மணிநேரம் 39 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
சரியான சாலை வசதிகள் கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் படிக்கும் சாத்விகாவுக்கு 'விண்வெளியில் பறக்க வேண்டும்' என்பது கனவு. அப்படியா என எல்லாரும் அவரை கிண்டல் செய்கிறார்கள். மகளின் கனவை பற்றி கவலைப்படாமல் அவருடைய 16 வயதிலயே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைக்கிறார் குடிகார தந்தை. மனைவியின் ஆசை, லட்சியத்தை முதலிரவில் அறிந்து கொண்ட டிரைவரான கணவன் துல்கர், தான் கஷ்டப்பட்டு உழைத்து, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, வெளியூரியில் குடியேறி, மனைவியை கல்லுாரியில் படிக்க வைக்கிறார். விண்வெளி வீராங்கனை கனவுக்காக, குஜராத் சென்று டபுள் ஷிப்ட்டில் லாரி ஓட்டி, மனைவியை திருவனந்தபுரத்தில் மேல்படிப்பும் படிப்பை படிக்க வைக்கிறார். 4 ஆண்டுகள் மனைவியை பிரிந்தும் இருக்கிறார். ஆனால் சாத்விகாவின் விண்வெளி புராஜக்ட் பெயிலியர் ஆகிக் கொண்டே இருக்கிறது. அந்த விரக்தியில் குடும்ப வாழ்க்கைக்கு போகலாம் என சாத்விகா முடிவு செய்கிறார். அப்போது என்ன நடக்கிறது. அவரால் விண்வெளிக்கு செல்ல முடிந்ததா என்பது ஏஒடி எனும் ஆகாயத்தில் ஒரு தாரகை. தெலுங்கில் வந்துள்ள இந்த படம் தமிழில் டப்பாகியுள்ளது.
முன்னணி ஹீரோவாக இருந்தாலும், தனது இமேஜ், ஹீரோயிசம், மார்க்கெட் பற்றி கவலைப்படாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவள்ள இதில் நடிக்க சம்மதித்திற்காக முதலில் துல்கர் சல்மானை பாராட்ட வேண்டும். குஜராத்தில் ஒரு சுரங்கத்தில் லாரி ஓட்டுனராக அவர் அறிமுகம் ஆகிறார். அந்த ஏரியாவை சேர்ந்த ருஹானிசர்மா புரியாத மொழியில் துல்கரை காதலிக்க, எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தனது கதையை சொல்கிறார். அதில் ஹீரோயின் சாத்விகா கிராமம், அவரின் ஆசை, டார்ச்சர் அப்பா, திடீர் திருமணம், துல்கரின் பாசம் ஆகியவை விவரிக்கிப்படுகிறது.
கதை நாயகனான துல்கர் எந்த சீனிலும் பில்டப் இல்லாமல் மிக இயல்பாக நடித்து இருக்கிறார் துல்கர். டிரைவர் கேரக்டர் என்பதால் காஸ்ட்யூமில், மேக்கப்பில் பகட்டு இல்லை. மனைவியின் விண்வெளி கனவுக்காக, தனது கடையை விற்று, அக்கா எதிர்ப்பை மீறி, ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதித்து மனைவியை கல்லுாரிக்கு படிக்க வைப்பதும், மனைவிக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்வதும் படத்தின் முக்கியமான சீன்கள். அதில் ரொம்ப சீரியஸ் ஆக நடிக்காமல், தனக்கே உரிய ஒருவித எனர்ஜி டோனில் நடித்து இருப்பதும் அழகு.
மனைவியின் ராக்கெட் கீழே விழுந்து பெயிலியர் ஆனபோதும், அவரை உற்சாகப்படுத்தி, அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கிறார். விண்வெளிதுறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஸ்ருதிஹாசன் மூலமாக இன்னொரு வழி காண்பிக்கிறார். படம் பார்க்கும் திருமணமான பெண்கள் 'நமக்கு இந்த மாதிரி கணவன் அமையலையே' என்றும், திருமணம் ஆகாதவர்கள் 'இப்படியொரு கணவன் அமைய வேண்டும்' என்று நினைப்பதும் நிச்சயம். சபாஷ் துல்கர்!
இது, சாத்விகாவுக்கு முதல் படம். அவர் சிகாகோவில் பிறந்து வளர்ந்த சென்னை பெண் என்பதை நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு ஆந்திரா கிராமத்து பெண்ணாக, அங்குள்ள ஒரு ஏழை மனைவியாக, திருமணத்துக்குபின் படித்து ஜெயிப்பவராக கலக்கியிருக்கிறார். அவரின் அந்த கண்கள், நடிப்பு, படிப்பு மீதான ஆர்வம், அதிகம் பேசாமல் சாதிப்பது பிரமாதம். பல இளம் பெண்களுக்கு அந்த கல்பனா கேரக்டர் உதாரணம். பலர் அவமானப்படுத்தினாலும் தனது கொள்கையில் உறுதியாக இருந்து, பல தடைகள், தோல்விகள் வந்தாலும் அதை தாண்டி கடைசியில் அவர் விண்வெளியில் பறக்கும்போது தியேட்டரில் கை தட்டல், பலர் கண்கள் கலங்குகிறார்கள். . இரண்டாம்பாதியில் கல்லுாரிமாணவி, விண்வெளி ஆராய்ச்சியாளர், கடைசியில் விண்வெளி வீராங்கனை என இன்னொரு கோணத்திலும் கலக்கியிருக்கிறார். அவருக்கு பல விருதுகள் நிச்சயம்.
கொஞ்சம் இடைவேளைக்குபின் விண்வெளி நிறுவன அதிகாரியாக வரும் ஸ்ருதிஹாசனும் ரொம்ப நாளுக்குபின் நல்ல கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவரின் கோபம், சுறுசுறுப்பு, ஹீரோயினை தேடி அலையும் காட்சிகள் அருமை. உயர் பதவியில் இருப்பவர்கள் தம் அடிக்கணும், சரக்கு அடிக்கணுமா என்ன? இயக்குனர் அப்படி காண்பித்து இருக்கிறார். தம்பி மனைவியின் நடவடிக்கைகள், அவரின் படிப்பு பிடிக்காத நாத்தனாராக ஸ்வாசிகா வருகிறார். அவரின் கேள்விகள், கோபப்பார்வை நச். கடைசியில் ஒரு கட்டத்தில் அவர் மாறுவதும் டச்சிங். இவர்களை தவிர, ஹீரோயின் அப்பா, அம்மா, ஹீரோயின் நண்பர்கள், விண்வெளி நிறுவன அதிகாரி முரளிசர்மா, கவுரவ வேடத்தில் வரும் நாசர் கேரக்டரும் மனதில் நிற்கிறது.
தெலுங்கு படம் என்பதால் பல இடங்களில் தமிழும், தெலுங்கில் எழுத்துகள் மாறி, மாறி வருகின்றன. வசனங்களில் இரு மொழி குழப்பம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி இருக்கலாம். டப்பிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. படிப்பு, கஷ்டம், தோல்வி, அவமானம் சீன்களில் கொஞ்சம் கத்தரி போட்டு இருக்கலாம். துல்கர் கேரக்டர் கடைசியில் மனைவி மீது கோபமாக இருப்பது கதையுடன் ஒட்டவில்லை. அதை வேறு மாதிரி காண்பித்து இருக்கலாம். விண்வெளி ஆராய்ச்சியை இன்னும் எளிமையாக சொல்லியிருக்கலாம். ஆனாலும், பெண்கள் கல்வியை, அவர்களின் முன்னேற்றத்தை, கனவை விவரிக்கும் தன்னம்பிக்கை கதையை சொன்ன விதத்தில் இயக்குனர் பவனும், கதாசிரியர் குன்னம்கங்கராஜூம் ஜெயித்து இருக்கிறார்கள்.
கிராமம், நகரம், விண்வெளி காட்சியை அழகாக காண்பிக்கிறது சுஜித் சரங் கேமரா. கதையின் தன்மை உணர்ந்து பாடல், பின்னணி இசை கொடுத்து ரசிக்க வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். முதற்பாதி வேகமாக ஓடுகிறது. இடைவேளைக்குபின் கொஞ்சம் தடுமாறுகிறது. கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் தொய்வு இருக்கிது. ஆனாலும், கிளைமாக்ஸ், நாட்டுப்பற்று, அந்த தேசிய கொடி, கிராம மக்கள் கொண்டாட்டம் ஆகியவை மனதுக்கு நெருக்கமாகிறது.
குக்கிராமத்தில் பிறந்தாலும், இங்கிலீஷ் தெரியாமல் கஷ்டப்பட்டாலும், பொருளாதார ரீதியில் திணறினாலும், அவமானங்களை சந்தித்தாலும் தொடர்ந்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கனவுகளுடன் இருக்கும் பெண்களுக்கு கணவன் உதவ வேண்டும் என்ற கரு பாராட்ட வைக்கிறது. இப்படிப்பட்ட படங்களில் ஏன் தமிழில் வருவது இல்லை என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.
ஆகாயத்தில் ஒரு தாரகை - விண்வெளியில் நாமும் பறக்கிற உணர்வு