பம்பையிலிருந்து மதுரை, பழநிக்கு கேரள அரசு பஸ் இயக்கம்
ADDED :2140 days ago
சபரிமலை: மதுரை, பழநிக்கு பம்பையில் இருந்து பஸ் இயக்க கேரள அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள் கேரள எல்லை வரை வந்து பின்னர் கேரள அரசு பஸ்சில் பம்பை வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பஸ் இயக்க கேரள அரசு போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி, மதுரை, பழநி ஆகிய இடங்களுக்கு கேரள அரசு பஸ் விடப்படுகிறது. இந்த பஸ்கள் இந்த வார இறுதியில் இயக்கப்படும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பம்பைக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து வருமானத்தில் ஏற்பட்ட குறைவை சரி செய்யும் விதமாக வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பஸ்களை இயக்குவதில் கேரள அரசு போக்குவரத்துக்கழகம் கவனம் செலுத்தி வருகிறது.