உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை தங்க அங்கி புறப்பாடு

நாளை தங்க அங்கி புறப்பாடு

 சபரிமலை,சபரிமலையில் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது.


கார்த்திகை முதல் தேதி தொடங்கி 41  நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் சிலைக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை  காணிக்கையாக வழங்கினார். 450 பவுன் எடை கொண்ட இந்த அங்கி மண்டலபூஜைக்கு முதல் நாளிலும், மண்டலபூஜையன்றும் மூலவருக்கு அணிவிக்கப்படும்.பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா  பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில்  வடிவமைக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபடுவர். நாளை காலை 6:00மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன்  புறப்படுகிறது.நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 26-ம் தேதி மதியம்  பம்பை வந்தடையும். சூரிய கிரகணத்தையொட்டி அன்று காலை 7:30 முதல் 11:30 வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். பம்பை கணபதி கோயில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி  மாலை மூன்று மணிக்கு சன்னிதானம் கொண்டு வரப்படும்.26 மாலை 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 27-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி  அணிவிக்கப்பட்டிருக்கும்.27 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும்  நடைபெறாது. 31 அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் நடை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !