ஐயப்பன் கோவில் மகோற்சவம் : தத்தமங்கலத்தில் கோலாகலம்
பாலக்காடு:தத்தமங்கலத்தில் ஐயப்பன் கோவில் மகோற்சவம் கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலம் அருகே உள்ளது மேற்கு கிராமம், இங்குள்ள தர்ம சாஸ்தா உற்சவ அறக்கட்டளை சார்பில், 76வது ஐயப்பன் மகோற்சவம் கடந்த டிச., 18ல் துவங்கியது. அன்றிலிருந்து புருஷோத்த ஹோமம், சங்கீத உபாசனை, சூக்த ஹோமம், நவகிரஹ ஹோமம், சம்பிரதாய மற்றும் பஜன், மகாருத்ரம், ருத்ராபிஷேகம், வாஸ்து சாந்தி, வேத பாராயணம், சிவபெருமானுக்கு பிரதோஷ விளக்கு, கருடவாகனம், அஸ்வ வாகனம், கஜ வாகன மற்றும் வைகார வாகனத்தில் மூலவர் அருள்பாலித்தல், சாஸ்தாவிற்கு பூர்ணாபிஷேகம், பகவத் சேவை, லட்சார்ச்சனை, பஞ்ச வாத்தியம், யானைகளின் அலங்கார அணிவகுப்பு போன்ற வைபவங்கள் நடந்தது.
சாஸ்தாபிரீதி-ரதோற்சவம் திருநாளான நேற்று காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம், ருத்ராபிஷேகம், மகா நிவேத்யா பூஜை, ஆகிய சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 11.00 மணியளவில், சரண கோஷத்துடன் ரதாரோகணம் நடந்தது.தேர்களில் மூலவர்கள் ஐயப்பனும், உபதேவர்களான கணபதி, முருகன் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணர் சுவாமிகள் அமர்ந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை நாராயணன் நம்பூதிரி குழுவினரின் பஞ்சவாத்தியம் முழங்க தேர்கள் வீதியுலா வந்தன.இன்று மூலவரின் ஆராட்டு நிகழ்ச்சியுடன் ஐயப்பன் மகோற்சவம் நிறைவடைகிறது.