உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 49 நாட்களில் .. 501 கோவில்கள் தரிசனம் செய்து சாதனை

49 நாட்களில் .. 501 கோவில்கள் தரிசனம் செய்து சாதனை

காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், 49 நாட்களில், 21 ஆயிரம் கி.மீ., பயணித்து, 501 கோவில்களில் தரிசனம் செய்து, சாதனை படைத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள, கே.வேலங்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, 30, கார்த்திகேயன், 26. சகோதரர்களான இருவரும், பொறியியல் பட்டதாரிகள்.பாண்டித்துரை, பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார்.

 கார்த்திகேயன், மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.வழக்கமான சுற்றுலாவை விரும்பாத இவர்கள், ஆன்மிக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இப்பயணத்திற்காக, பிரத்யேகமாக காரை வடிவமைத்தனர்.ஆன்மிக சுற்றுலா பயணத்தை, நவ.,7ல், கன்னியாகுமரியில் துவக்கினர்.தரிசனம்கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ரிஷிகேஷ், உத்தரகாண்ட், ஒரிசா, சிக்கிம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் நேபாளம் என, 49 நாட்களில், 21 ஆயிரம் கி.மீ., பயணம் செய்துள்ளனர்.இதில், 501 கோவில்களில் தரிசனம் செய்து உள்ளனர்.இது குறித்து, சகோதரர்கள் கூறியதாவது:எங்களது சொந்த ஊரான, வேலங்குடி மக்கள், சுற்றலா என்றாலே, ஏதாவது ஒரு கோவிலுக்கு தான் செல்வர். மென்பொருள் நிறுவனத்தில் வேலை; அதனால், ரிலாக்ஸ் செய்ய, சுற்றுலா செல்லலாம் என நினைத்தபோது, ஆன்மிக பயண திட்டம் உருவானது. நண்பர்களும், இதை வெறும் பயணமாக இல்லாமல், ஒரு சாதனையாக நிகழ்த்தலாம் என்றனர்.இதுபோல, ஆன்மிக சாதனை பயணம் யாரும் செய்திருக்கிறார்களா என, இணையத்தில் தேடினோம். யாரும் செய்யவில்லை.

இதையடுத்து, நாமே செய்வோம் என, முடிவு எடுத்தோம். கின்னஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக, பயணத்தை மேற்கொண்டோம். காரில், ஜி.பி.எஸ்., கேமரா, சார்ஜர், சமையல் என, அனைத்து வசதிகளும் உருவாக்கினோம்.மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில், வித்தியாசமாக, கார் முழுவதும் ஆன்மிகம் குறித்த, ஸ்டிக்கர்களை ஒட்டி வடிவமைத்தோம்.எங்கள் ஊர் மக்களிடம், ஆன்மிக பயணம் குறித்து தெரிவித்த போது, தங்கள் சொந்த பிள்ளைகளே சாதிக்க போவதாக நினைத்து, எங்களை ஊக்கப்படுத்தினர். பயணத்தை துவக்கி வைக்க, கலெக்டரை அழைக்க முடிவு செய்தோம். அவர் வருவாரா என, சந்தேகம் இருந்தது. அவர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக இருந்தார். 10 நிமிடம் அனுமதி கேட்டுச் சென்ற எங்களிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.பிரமிப்புபயண துவக்க விழாவில், கலெக்டர் ஜெயகாந்தனும், எஸ்.பி, ரோஹித்நாதனும் பங்கேற்று, எங்களை வழியனுப்பி வைத்தனர். இது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. கன்னியாகுமரியில் துவங்கி, ஜம்மு - காஷ்மீர் வரையிலும், 20 மாநிலங்கள் சென்றோம். நேபாளமும் சென்றோம். பழமையான கோவில்களை கண்டு பிரமிப்படைந்தோம். வடமாநிலத்தினர், ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். அனைத்து இடங்களிலும், மக்கள் பெரிதும் வரவேற்றனர். அனைத்து மதத்தினரும், எங்களுடன், செல்பி எடுத்துக் கொண்டனர்.தவிர, எந்த பிரச்னை என்றாலும், எங்களை அழையுங்கள் என, நம்பிக்கை தெரிவித்தனர்.பிரமிப்பூட்டும் கோவில்களையும், நல்ல மக்களையும் சந்தித்தோம். வயதில் மூத்தோர் சிலர், எங்கள் பயணத்தை கேள்விப்பட்டு, எங்களை தேடி வந்து வணங்கி சென்றனர். எங்களை, சமூகவலைதளத்தில் பார்த்த, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, நேரில் அழைத்து பாராட்டினார். சொந்த ஊர் திரும்பிய எங்களுக்கு, ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !