தை அமாவாசையை முன்னிட்டு சேலத்தில் முன்னோர் வழிபாடு
ADDED :2129 days ago
சேலம்: தை அமாவாசையை முன்னிட்டு, சேலத்தில் நேற்று ஏராளமானோர் முன்னோர் வழிபாடு நடத்தினர். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி, வழிபாடு செய்வதன் மூலம், கடன்தொல்லை, சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என நம்பப்படுகிறது. தை அமாவாசை தினமான நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பிருந்தாவனத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் வழங்கினர். குருக்கள் வழிகாட்டுதலில், தேங்காய், பழம் உடைத்து, பிண்டம் பிடித்து, எள் நீர் வழங்கி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினர். மேலும் மூக்கனேரி, கந்தாஸ்ரமம், குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி புது ஏரி உள்ளிட்ட பல நீர்நிலைகள் மற்றும் கோவில் வளாகங்களில், திரளானோர் முன்னோர் வழிபாடு நடத்தினர்.