கவுந்தப்பாடி காந்தி கோவிலில் இருந்து தேசபக்தி பாத யாத்திரை துவக்கிய தம்பதி
கவுந்தப்பாடி காந்தி கோவிலில் இருந்து, மதுரை தம்பதி தேசபக்தி பாத யாத்திரை தொடங்கினர்.
மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா, 51; இவரது மனைவி சித்ரா, 51; தம்பதியருக்கு, 26 வயதில் மகன், 25 வயதில் மகன் உள்ளனர். மகாத்மா காந்தி கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1992 முதல், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு பகுதிக்கு பாதயாத்திரை, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, காந்தியின் தேசப்பற்று, வாழ்க்கை வரலாற்றை, தேசபக்தி பாத யாத்திரையாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, செந்தாம்பாளையத்தில் உள்ள காந்தி கோவிலுக்கு, தம்பதி நேற்று வந்தனர். குடியரசு தின நாளில், இந்த கோவிலில் வழக்கமாக காந்தி மற்றும் அன்னை கஸ்தூரிபாய் சிலைக்கு, நேற்று அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு உடமைகளை சைக்கிளில் வைத்துக் கொண்டு, பாதயாத்திரை புறப்பட்டனர்.
இதுகுறித்து தம்பதியர் கூறியதாவது: தீவிரவாதம் இல்லாத இந்தியா உருவாக வேண்டும். காந்தி கொள்கையை, மக்களிடம் விழிப்புணர்வு மூலம் விதைக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பயணிக்கிறோம். ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, சித்தூர், விஜயவாடா வழியாக ஐதராபாத் வரை, 45 நாட்களில், 1,000 கி.மீ., தூரம் செல்கிறோம். மார்ச், 12ல், ஐதராபாத் காந்திபவனில், யாத்திரையை நிறைவு செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.