அந்தநாள் நாயகனுக்கு இத்தனை பெயர்களா?
அன்னை எத்தனை அன்னையோ! அப்பன் எத்தனை அப்பனோ என்று மீண்டும் மீண்டும் மண்ணில் பல பிறவிகள் எடுத்து வந்ததாக அருளாளர்கள் இறைவனிடம் முறையிடுகிறார்கள். பிறவிச்சக்கரத்தில் சிக்கி நாம் அனைவருமே சுற்றிச் சுழன்று வருகிறோம். என்றாவது அந்த ஒருநாள் இம்மண்ணுலகை விட்டு கிளம்ப வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது எந்தநாள் என்பதுதான் நமக்குத் தெரியாது. நம் உயிரைப் பறிப்பதற்கு இறைவனின் பிரதிநிதியாக ஒருவர் இருக்கிறார். அவரை அந்தகன், கூற்றுவன், எமதர்மன், காலதேவன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பெயர்கள் ஒரே நபரையே குறிப்பிட்டாலும், ஒவ்வொன்றிற்கும் வேறு வேறு பொருள் உண்டு. எமனுக்கு பச்சிளங்குழந்தை முதல் வயோதிகர் வரைஎல்லாருடைய உயிரும் ஒன்று தான். உலகம் என்ற மரத்தில் இருந்து பூவும் உதிரும், பிஞ்சும் உதிரும், காயும் உதிரும், கனியும் உதிரும். ஏனென்றால், எமன் குருடனைப் போல செயல்படுபவன். எனவே, அவனுக்கு அந்தகன் என்று பெயர் வந்தது. அந்தகன் என்றால் குருடன். நகமும், சதையும் போல உடலும் உயிரும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆனால், எமன் உயிரையும் உடலையும் கூறுபோட்டு ஒருநாள் பிரித்து விடுகிறான். அதனால் அவனுக்கு கூற்றுவன் என்று பெயர். இயமன் என்ற சொல்லே திரிந்து எமன் என்றாகி விட்டது. இயமம் என்றால் ஒழுங்கிற்கு கட்டுப் பட்டவன்; தர்மன் என்றால் நீதிநேர்மை தவறாதவன். காலதேவன் என்றால் காலசக்கரத்தை இயக்குபவன். எமனே காலபாசம் என்னும் கயிறைக் கொண்டு நம் மூச்சினை நிறுத்துகிறான். பாசக்கயிறு தீண்டியவுடன் நம் இயக்கம் நின்று விடுகிறது. கால தேவனின் கட்டுப்பாட்டிற்குச் சென்றதும் ஒருவரை காலமானார் என்று குறிப்பிடுகிறோம். காலம் என்ற நியதி தத்துவத்திற்குள் நாம் நுழைந்துவிட்டபின், நமக்கென்று தனி இயக்கம் இல்லை. எப்படி நதி வெள்ளம் கடலில் கலந்ததும் தன் தனிப்பட்ட ஓட்டத்தை இழந்துவிடுகிறதோ அதுபோலத்தான் இதுவும்.