உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)-நல்லநேரம் பொறந்தாச்சு!

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)-நல்லநேரம் பொறந்தாச்சு!

கல்யாண யோகம் வந்தாச்சு! 80/100

லட்சிய நோக்குடன் செயல்படும் மேஷராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ளார். ராசிக்கு பாக்ய, விரய ஸ்தான அதிபதியாக உள்ள குரு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். ரிஷபத்தில் உள்ள குரு 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே எதிரி, ஆயுள் பலம், தொழில் ஸ்தானங்களை பார்க்கிறார். பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. புத்திரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

தொழிலதிபர்கள்:  ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். மற்ற தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். 

வியாபாரிகள்:  நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.

பணியாளர்கள்: அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். சுபவிஷயங்களைத் தலைமையேற்று நடத்துவர். அவரவர் தகுதிக்கேற்ப ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு  லாபம் கிடைக்கும்.

மாணவர்கள்:  இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:  அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர். 

விவசாயிகள்:  விவசாயப்பணிகளை விரைந்து நிறைவேற்ற பணவசதி குறைவின்றிக் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு.  நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் தாராள பணவரவும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் உண்டாகும். செல்ல வேண்டிய தலம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

பரிகாரப்பாடல்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

குரு வக்ர பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குரு வக்ரகதி பெறுகிறார். ஏற்கனவே குருவால் ஏற்படும் நற்பலன்கள் வக்ரகாலத்தில் இன்னும் கூடுதல் நன்மையாக மாறும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள்.  தொழிலதிபர்கள்,வியாபாரிகள், பணியாளர்கள் முன்னேற்றம் பெறுவதோடு தாராள பணவரவும் கிடைக்கப் பெறுவர். எதிர்கால நலன்கருதி சேமிக்கவும் வாய்ப்புண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மறைமுக எதிரிகள் பலமிழந்து போவர். வெற்றி தேவதையின் அருள்பார்வை கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டாகும். நீண்டகாலமாக வாங்க நினைத்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !