மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)-பொறுமையா இருங்க சாமி! 60/100
அன்பும் கருணையும் நிறைந்த மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அனுகூலக் குறைவாக, குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். போதாக்குறைக்கு அஷ்டமச் சனி காலம் வேறு. கடந்த வருடங்களில் குருவின் அமர்வினால் கிடைத்த பணவரவு கரைய ஆரம்பிக்கும். அதேநேரம், குடும்பச் செலவுகளுக்கு கைகொடுப்பதாக இருக்கும். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 பார்வைகளால் முறையே ராசிக்கு ஏழாம் இடமான களத்திரம், நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். உங்களிடம் நன்றாகப் பேசி பழகுபவர்களிடமிருந்து கூட விலகிப்போகிற எண்ணம் மேலிடும். பேச்சு, செயலில் இருந்த ஆர்வம் குறையும். தம்பி, தங்கைகள் சொல்லும் நல்ல ஆலோசனைகள் கூட உங்களுக்கு எதிர்மறையாக தோன்றும். இதனால், அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றுவர். புத்திரர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்புரிந்து படிப்பில் தேர்ச்சியும் கலைகளில் ஆர்வமும் வளர்ப்பர். பூர்வ புண்ணிய பலன் தாமதமாக வந்து உதவுகிற கிரகநிலை உள்ளது. பூர்வ சொத்திலும், பிற வருமானங்களும் குறையும். ஆடம்பரச் செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். இதனால் கடன்பட நேரிடும். எதிரிகள் உங்களை அவமானப்படுத்துகிற செயல்களைச் செய்வர். பொறுமை தேவை. உடல்நிலை பலவிதத்திலும் சிரமம் தரலாம். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். குடும்பப் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகும். புதியவர்கள் அறிமுகமாகி நண்பராவர். வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்டாலும் குருவின் அருள்பார்வையால் குடும்பத்தின் முக்கியத் தேவை நிறைவேறும். தொழில் சார்ந்த வகையில் குளறுபடி ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதால் மட்டுமே பணி வாய்ப்புக்களை தக்கவைக்க இயலும். வெகுநாட்களாக தாமதமான நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக வந்துசேரும். விலைமதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், லாட்ஜ், ஓட்டல், பால்பண்ணை, மாவுமில், அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், தோல், இரும்பு, காகிதம், மின்சார, மின்னணு சாதனங்கள், மினரல் வாட்டர் உற்பத்திசெய்யும் தொழிலதிபர்கள் தகுதியான பணியாளர் கிடைப்பதிலும் உற்பத்தி, தரத்தை உயர்த்துவதிலும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பர். நண்பர்களின் உதவியால் நிலைமையை ஓரளவு சமாளிக்கலாம். கிடைக்கிற லாபம் போதுமென்ற நிலை இருக்கும்.புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்களுக்கு இது உகந்த காலம் அல்ல.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஸ்டேஷனரி, அழகுசாதனம், மீன், பால்பொருள், கட்டுமானப்பொருள், மின்சார மின்னணு சாதனம், பேக்கரி, மருந்து வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்திப்பர். மற்ற வியாபாரிகளுக்கு சுமாரான விற்பனை, அளவான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை அனுசரித்து பேச வேண்டும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் குளறுபடிகளால் பணிகளை விரைந்து முடிப்பதில் தாமதமடைவர். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, பதவி நீக்கம் போன்ற எதிர்மறை பலன்களைச் சந்திக்க நேரும். சக பணியாளர்கள் உதவுகிற மனப்பாங்குடன் நடந்துகொள்வர். வீடு, வாகனம், பணியிட வகையில் மாற்றம் இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்றவதில் சில குளறுபடிகளைச் சந்திப்பர். நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையால் மனதில் சஞ்சலம் ஏற்படும். கூடுதல் பயிற்சி பணித்தரத்தை உயர்த்தும். சலுகைகள் பெறுவதில் தாமதம் உண்டு. குடும்பப் பெண்கள் சுயகவுரவ சிந்தனை, செயல்பாடுகளால் உறவினர்களிடம் அதிருப்தி அடைவர். கணவரின் பாசம் ஆறுதல் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமிட்டால் போதும். கடும் உழைப்பினால் தான் தொழில் வியாபாரத்தை தக்கவைக்கலாம்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, இதழியல், தொழில்நுட்பம், வணிகவியல், கலைத்துறை மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் குறைய வாய்ப்புண்டு. டிவியில் பொழுது போக்குவதை அறவே தவிர்க்கவும். ஆசிரியரின்அதிருப்திக்குஉள்ளாகும்சூழல் உள்ளது. கவனம். படிப்புக்கான பணவசதி பெறுவதில் தாமதம் இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு பிற துறை சார்ந்த பணி கிடைத்து திருப்தியின்றிஇருக்கும்.
அரசியல்வாதிகள்: கவனக்குறைவான செயல்களால் சிலரது அதிருப்தியை சந்திக்க நேரிடும். ஆதரவாளர்களின் நம்பிக்கை குறையும். பதவி, பொறுப்பில் இருந்து சிலர் விலக நேரலாம். எதிரிகளின் கெடுசெயல்களை சமாளிக்க நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். அரசியல்பணிக்கு புத்திரர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற அதிக செலவு, தாமதம் ஆகிய நிலைமை இருக்கும். அளவான பயிர் மகசூல் அமைந்து அதற்கேற்ற பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு உண்டு. நிலம் தொடர்பான விவகாரங்களில் தீர்வுபெற இன்னும் சில காலம் தேவைப்படும்.
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.
செல்ல வேண்டிய தலம்: திருப்பதி ஏழுமலையான் கோயில்
பரிகாரப்பாடல்: செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!
வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் குருவுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குரு வக்ரகதி பெறுகிறார். இதனால் பலகாலம் பாதுகாத்த முக்கிய பொருள்களை விற்க வேண்டியும், கடைப்பிடித்த சில கொள்கைகளை விட்டுக் கொடுக்கிற நிலையும் உருவாகும். உடன் பிறந்தவர்கள் சொல்கிற நல்ல ஆலோசனை கூட எதிராகத் தோன்றும். வீடு, வாகன வகையில் சுமாரான நிலையே இருக்கும். புத்திரர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சாதனை நிகழ்த்துவர். எதிரிகளின் தரம் குறைந்த பேச்சுக்களை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நலம் குறைவதால் மனதில் நம்பிக்கையும் குறையும். அதே நேரம் நண்பர்களின் ஆதரவு கிடைத்து தெம்பை உருவாக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பர். தொழில் வளம் சிறக்க கூடுதல் அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கணிசமான தொகை ஒரு சிலருக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும்.