அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
விழுப்புரம்;விழுப்புரம் மகாராஜாபுரத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 2ம் ஆண்டு மயானக்கொள்ளை பெருவிழா நடைபெற்றது.
விழுப்புரம் மகாராஜாபுரத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழாவை யொட்டி, கடந்த 6ம் தேதி கொடியேற்றுதல், காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, அய்யனார் குளக்கரையில் இருந்து அம்மன் அலங்கரித்து கரகம் எடுத்து வருதல், இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின், அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக, விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு வழியாக மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு மாலை 3.00 மணிக்கு, மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் காளி, காட்டேரி போன்று வேடமணிந்து வழிபட்டு தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.