இலஞ்சி குமாரர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
குற்றாலம் :இலஞ்சி குமாரர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.இலஞ்சி குமாரர் கோயிலில் கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. ஏழாம் திருவிழா அன்று நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, எட்டாம் திருவிழா அன்று நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலை வந்து சேர்ந்ததும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பத்தாம் நாளான இன்று (4ம் தேதி) காலையில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கணபதி முருகன், நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன், கோயில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.