அப்படி என்ன பேரழகி அவள்?
ADDED :2029 days ago
ராமர் ராவணனைப் போரில் வென்றார். இலங்கை அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டினார். விழா முடிந்ததும் சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் வானரங்களையும் அழைத்துக் கொண்டு, இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார். விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. விமானத்திலிருந்து ராமர் கீழே இறங்கினார். கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின. அவற்றுக்குத் தங்கள் கணவரைப் பார்ப்பதற்கும் முன்னால் சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்படி என்ன பேரழகி அவள்? அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர்? என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ? நம்மைப் போல் இவளுக்கு ஒரு வால்கூட இல்லையே!