உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜரின், 1,003வது அவதார உற்சவம்

ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜரின், 1,003வது அவதார உற்சவம்

ஸ்ரீபெரும்புதுார் : ராமானுஜரின், 1,003வது அவதார உற்சவ சாற்றுமுறை விழா, சமூக வலைதளமான, யு -டியூப் வழியாக, நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை, அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர்.ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக, ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இங்கு, ஆண்டுதோறும் சித்திரை, திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஒன்பது நாள் உற்சவ விழா நடப்பது வழங்கம். பல மாநிலங்களில் இருந்து, ராமானுஜரின் பக்தர்கள், ஸ்ரீபெரும்புதுார் வந்து வழிபடுவர்.இந்த ஆண்டு, 1,003வது அவதார உற்சவ விழா, 19ம் தேதி துவங்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், உற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. கோவிலில், வழக்கமாக நடைபெறும் நித்ய திருவாராதனம் முறைகள் மட்டும் நடந்தன.

பல நுாறு ஆண்டுகளாக நடக்கும் உற்சவ விழா, ஊரடங்கால் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதனால், உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான, சாற்று முறை விழாவை காண ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், இன்று காலை, 9:00 மணிக்கு நடைபெறும் சாற்றுமுறை விழாவை, சமூக வலைதளமான, யு -டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்ப, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

பொதுமக்கள், https://www.youtube.com/channel/UCLUgnDKphLOpsoMy6a78odw என்ற இணைப்பை பயன்படுத்தி, ராமானுஜரின் திருமஞ்சனம் மற்றும் சாற்றுமுறை விழாவை கண்டு ரசிக்கலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !