மழை வேண்டி நாராயணி பீடத்தில் 10,008 பன்னீர் குட அபிஷேகம்
வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி, ஓம் சக்தி நாராயணி பீடத்தின், 20ம் ஆண்டு விழா மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும், பத்தாயிரத்து எட்டு பன்னீர் குட அபிஷேகம் நடந்தது.இதற்காக நாராயணி வித்யாலாயா பள்ளியில் இருந்து, பத்தாயிரத்து எட்டு பன்னீர் குட ஊர்வலம் நடந்தது. ஒடிஸா கவர்னர் பட்நாயக் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில், சக்தி அம்மா, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், ஸ்ரீபுரம் தங்க கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் அறங்காவலர் குழு தலைவர் சவுந்தரராஜன் உட்பட நூற்றுக்கணக்கான வெளி நாட்டு பக்தர்களும் கலந்து கொண்டனர்.பெண்கள் பன்னீர் குடங்களை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாராயணி பீடத்தை அடைந்தனர். அங்கு சுயம்பு நாராயணி அம்மனுக்கு சக்தி அம்மா அபிஷேகம் செய்தார். தொடர்ந்து பீட வளாகத்தில் உள்ள கோவிலிலும், தங்கக் கோவிலிலும் சக்தி அம்மா தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், ஒடிஸா கவர்னர் பட்நாயக் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை பீடம் மேலாளர் சம்பத் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக வேலூர் வந்த ஒடிஸா கவர்னர் பட்னாய்க்கை சுற்றுலா மாளிகையில் கலெக்டர் அஜய் யாதவ், எஸ்.பி., கயல்விழி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.