இழந்த சொத்தை மீ்ட்க...
ADDED :1928 days ago
நவகைலாய தலங்களில் ஸ்ரீவைகுண்டம் காசிவிஸ்வநாதர் கோவில் சனீஸ்வரனுக்குரியதாக திகழ்கிறது. இங்கு வழிபட்டால் இழந்த சொத்து, பணம் மீண்டும் கிடைக்கும்.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இக்கோயிலில், நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர், நடராஜர், அக்னி வீரபத்திரர், வீரபத்திரர் சிற்பங்கள் துாண்களில் உள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு தனி சன்னிதி உள்ளது. இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டது.
நவ கைலாய தலங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரக தோஷத்தை போக்குபவையாக உள்ளன. இத்தலம் சனிதோஷம் போக்குவதாக உள்ளது. சனீஸ்வரர் தனி சன்னிதியில் இருக்கிறார். இவரை வழிபட்டால் இழந்த சொத்து, பணம் திரும்ப கிடைக்கும். திருமணத்தடை நீங்கும்.
திருமாலும், லட்சுமியும் இங்கு தங்கியிருப்பதால் இத்தலம் ‘ஸ்ரீவைகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது. ‘வைகுதல்’ என்றால் ‘தங்குதல்’. 108 திவ்யதேசங்களில் ஒன்றான கள்ளபிரான் கோயில் இங்குள்ளது. நவ திருப்பதிகளில் இத்தலம் சூரியனுக்கு உரியதாகும். ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் இருப்பது தனிச் சிறப்பு.
சாஸ்தாவின் அம்சமான பூதநாதர் காவல் தெய்வமாக இருக்கிறார். சித்திரைத் திருவிழாவின் போது, இவருக்கே முதல் மரியாதை செய்யப்படும். இவருக்கு புட்டு, சர்க்கரைப்பொங்கல், புளியோதரை நைவேத்யம் செய்யப்படுகிறது. இவருக்கு சந்தனத்தைலம் மட்டுமே பூசுவர். விருப்பம் நிறைவேற வடைமாலை சாத்துகின்றனர்.
விசேஷ நாட்கள்: சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசி திருக்கல்யாணம், கந்தசஷ்டி, சிவராத்திரி.