உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்!

பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்!

வள்ளியூர் : பழவூர் ஆவுடையம்மாள் சமேத நாறும்பூநாத சுவாமி கோயிலில் வரும் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ராதாபுரம் தாலுகா பழவூரில் களக்காடு பாண்டிய மன்னர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆவுடையம்மாள் சமேத நாறும்பூநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பு பெரும்பொதி விநாயகர் மற்றும் ஆனந்த நடராஜர் கொலு கொண்டிருப்பது தான். இங்குள்ள ஆனந்த நடராஜர் திருவாலங்காட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாக ஐதீகம். இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. முன்னதாக 23ம் தேதி கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. அன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, பிரம்ம பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, அம்மன் கோயில் வழிபாடு, முளைப்பாரிக்கு மண் எடுத்து வருதல், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரட்சாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்திராதானம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை பூஜை நடக்கிறது. இரண்டாம் நாள் 24ம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், சோமகும்ப பூஜை, விசேஷ சந்தி, பூதசுத்தி, இரண்டாம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அர்ச்சனை, சதுர்வேதம் 12 திருமுறை சமர்பித்தல், மகா தீபாராதனை, யந்திரபூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மூன்றாம் நாள் 25ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, ரட்சாபந்தனம், காலை 8.30 மணிக்கு சுபிர்சாகுதி, நாடி சந்தனம், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் காலை 9.30 மணிக்கு யாத்திராதானம், கடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணிக்கு விமானம் மற்றும் சாலை கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 10.25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு மகா அபிஷேக, தீபாராதனை பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ராதாபுரம் சிதம்பரபட்டர், ஆலய அர்ச்சகர் ஈஸ்வரசுப்பிரமணிய பட்டர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அன்னக்கொடி மற்றும் திருப்பணி, கும்பாபிஷேக உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !