கோவில் நடைகள் திறந்தன பரவசத்துடன் நடந்த பூஜைகள்
ADDED :1878 days ago
சூலூர்: ஐந்து மாதங்களுக்கு பிறகு, நேற்று கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்ற துறைகளுக்கு ஜூன் மாதமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மத வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, சூலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை திறக்கப்பட்டு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. முதல் விழாவாக, ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று மதியம் துவங்கியது. பரிகார ஓமம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தன. நேற்று பவுர்ணமி என்பதால், அம்மன் கோவில்கள், குல தெய்வ கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.