திருக்கோவிலுார் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் வருகை புரிந்திருந்தனர்.
திருக்கோவிலுார் புராதான நகரம். இங்கு நடுநாட்டு திருப்பதி எனப் போற்றப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. அதேபோல் அட்டவீரட்டானங்களின் இரண்டாவது தளமான வீரட்டானேஸ்வரர் கோவில். தென்பெண்ணையின் வடகரையில் ரகூத்தமர் மூலபிருந்தாவனம், ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் என ஆன்மிக தலங்கள் அதிகம் உள்ளது.இதனை தரிசனம் செய்வதற்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் ஆன்மிக அன்பர்கள் வந்து செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு உத்தரவால் பக்தர்களின் வருகை இன்றி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது முழு முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இ பாஸ் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ஞாயிற்றுக் கிழமையான நேற்று முதல் முறையாக வெளியூர் பக்தர்கள் கார்களில் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குவந்திருந்தனர்.இதன் காரணமாக கோவில் முன்பாக ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றதை நீண்ட நாட்களுக்கு பிறகு காணமுடிந்தது. அதேபோல் கோவில் வளாகத்தில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.