மதுரை, ஆண்டிபட்டியில் 9ம் நுாற்றாண்டு செக்கு கல் வெட்டு
மதுரை : மதுரை வாடிப்பட்டியில் 9ம் நுாற்றாண்டின் செக்கு கல்வெட்டை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜகோபால் சில மாதங்களுக்கு முன் கண்டுபிடித்த நிலையில் ,தேனி ஆண்டிபட்டியில் 9ம் நுாற்றாண்டின் செக்கு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் கண்டுபிடித்துள்ளார்.
காந்திராஜன் கூறியதாவது: ஆண்டிபட்டியில் ஒரு ஓடையில் செக்கு கல்வெட்டு இருப்பதை மணி, சோலை பாலு, சுந்தரபாண்டியனுடன் கண்டறிந்தேன். இதில் தெந்முட்ட நாட்டு கண்ணிமங்கலத்து குடியான் சேவடி இடுவிச்ச செக்கு என வட்டெழுத்தில் பொறித்துள்ளனர். இது 9ம் நுாற்றாண்டின் பாண்டியர் கால கால்வெட்டு என ஆய்வாளர் ராஜவேலு தெரிவித்தார்.
அந்த காலத்தில் வெளியூர் பயணிக்கும் பயணிகள், துறவிகள், வணிகர்கள், மக்கள் உணவு சமைக்க நீர்நிலை அருகே செக்கு செதுக்குவர். இதை கோயில்களுக்கு மன்னர், மக்கள் தானமாக தரும் போது தந்தவர் விபரம் பொறிக்கப்படும்.இக்கல்வெட்டு மதுரை கிண்ணி மங்கலத்தில் கிடைத்த தமிழ் பிராமி, வட்டெழுத்து கல்வெட்டுடன் ஒன்றி போகிறது.இதிலுள்ளசேவடி இறை தொண்டு செய்யும் சேவடி கூட்டம் என்பவர்களை குறிக்கிறது. பராம்பரிய பெருமையுள்ள கல்வெட்டை பாதுகாக்க வேண்டும், என்றார்.
உதவி பேராசிரியர் ராஜகோபால் கூறியதாவது: வாடிப்பட்டி வெ.பெரியகுளம், சரந்தாங்கியில் ஆய்வு செய்த போது செக்கு கல்வெட்டை கண்டறிந்தேன். ஆய்வாளர் ராமர், வேலுச்சாமி படியெடுத்து 1300 ஆண்டுகளுக்கு முந்தையது, என கூறினர். 9ம் நுாற்றாண்டின் முற்கால பாண்டியர் கால கல்வெட்டான இதில் காடனுத்த நாடி இடுவித்த செக்கு என வட்டெழுத்தில் பொறித்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறினார். காடனுத்த நாடி என்பதற்கு செக்கை உருவாக்கியவர் என்று பொருள், என்றார்.