உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம் : ஐப்பசி மாத பலன்கள்!

சிம்மம் : ஐப்பசி மாத பலன்கள்!


மகம் :
    ராசிநாதன் சூரியன நீசம் பெற்ற நிலையில் சஞ்சரித்தாலும், நட்சத்திர அதிபதி கேது உச்சமாக இருப்பதால் சுகமான சூழல் அமையும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். மனதில் எண்ணியதை தயக்கமுமின்றி செய்வீர்கள். அடுத்தவர் செய்யத் தயங்கும் செயலைக் கூட அநாயாசமாக செய்து நற்பெயர் காண்பீர்கள். அதே நேரத்தில் ஓய்வின்றி உழைக்கும் நிலை வரலாம். . குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி அமையும். பேச்சில் ஆணித்தரமான கருத்துக்கள் வெளிப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீ்ர்கள். வீட்டிற்குத் தேவையான மரச்சாமான் வாங்குவதில் நாட்டம் செல்லும். வாகனங்கள் பயனுள்ள வகையில் அமையும். உடன்பிறந்தோருக்கு தனிப்பட்ட முறையில் உதவுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிகளுக்குத் துணை நிற்கும். முன்பின் தெரியாதவர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது. உறவினரால்  சங்கடமான சூழல் ஏற்படலாம். மாணவர்கள் சிறப்பாக படிப்பர்.  அக்டோபர் இறுதியில் எதிர்பாராத பிரயாணம் செல்ல வாய்ப்புண்டு. பிள்ளைகளின் செயல்பாடு கவுரவத்தை உயர்த்தும் வகையில் அமையும். தொடர்பணியின் காரணமாக உடல்நலக்குறைவு வரலாம். மனைவிக்கு முன்நின்று உதவி செய்ய வேண்டியிருக்கும். தொழிலில் வெற்றி காணத் துவங்கும் நேரம் இது. பணியாளர்கள் அலைச்சலை சந்தித்தாலும் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் சிறக்கும்.  நினைத்ததை செய்து முடித்து நற்பலன் காணும் மாதமே.
பரிகாரம் : ஞாயிறு தோறும் சரபேஸ்வரரை வழிபடுங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக். 28

பூரம் :
    ராசிநாதன் சூரியனும், நட்சத்திர அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை யோகம் பெற்ற நிலையில் மாதம் தொடங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டிய பணிக்கு சரியான சமயத்தில் உதவி கிடைக்கும். பிறர் பார்த்து பெருமைப்படும் அளவிற்கு நடக்க வேண்டும் என எண்ணுவீர்கள். தனிப்பட்ட முறையில்  செயல் வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள். நினைத்ததை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். அதே நேரம் உங்களின் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்தாலும் கருத்துக்களால் பிறரை புண்படுத்தக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் சீரான முன்னேற்றம் கண்டு வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.  முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவும்போது கவனமுடன் செயல்படவும். தகவல் தொடர்பு சாதனங்களால் சாதகமான பலன் கிடைக்கும். வண்டி, வாகனங்களால் நன்மை காண்பீர்கள். பிரயாணத்தின்போது கவனமுடன் இருப்பது அவசியம். உறவினர் பிரச்னைக்கு தீர்வு காண முற்படுவீர்கள். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் செயல்பாட்டால் கவுரவம் உயரும். பொதுவிஷயங்களில் உங்களின் ஆலோசனை  நற்பெயரைப் பெற்றுத் தரும். மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களிடம் சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். கூட்டுத்தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்கள்  பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவர். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வந்து சேரும் நேரம் இது. உற்சாகத்தின் மூலம் வெற்றி காணும் மாதம் இது.
பரிகாரம் : கோவில் குளத்தில் மீன்களுக்கு பொரியிடவும்.
சந்திராஷ்டம நாள் : அக். 28, 29

உத்திரம் 1ம் பாதம் :
     ராசிநாதனும், நட்சத்திர அதிபதியுமான சூரியன்  நீசம் பெறுவதால் அதைரியத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை நம்பி இறங்கிய செயல்களில் தாமதம் உண்டாகும். தன் கையே தனக்குதவி என உழைக்க வேண்டியது அவசியம். எளிதில் முடிந்து விடும் என்று எண்ணிய செயலில் இடையூறை சந்திக்கலாம். தைரியத்தை இழக்காமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உதவி பெற்றவர்களே உங்களை அலட்சியப்படுத்த வாய்ப்புண்டு.  அடுத்தவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசுவீர்கள். நம்பிக்கைக்குரிய நபர் ஒருவர் உங்களுக்கு மாறாக செயல்படுவதாக எண்ணி வருத்தம் கொள்வீர்கள்.  பொருளாதார வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். மற்றவர் மீது குறை காண்பதால் உதவிக்கு ஆள் இல்லாமல் அவதிப்பட நேரிடும்.  அவ்வப்போது பிரயாணம் செல்வீர்கள்.  தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ச்சிக்கு துணை நிற்கும்.  வாகனங்களால்  செலவை சந்திக்க நேரலாம். மாணவர்கள் முன்னேற்றம் காண கூடுதலாக உழைப்பது அவசியம்.  தத்துவ சிந்தனைகள் மனதில் அதிகம் ஆக்கிரமிக்கும். காது, மூக்கு, தொண்டை பகுதியில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உற்சாகமூட்டும் வகையில் அமையும். வியாபாரிகள்  அபிவிருத்தி செய்யும் முயற்சியில் அதிக அலைச்சலுக்கு ஆளாவர். பணியாளர்கள் தற்காலிக ரீதியான இடமாற்றத்தை சந்திப்பர். மொத்த்தில் நன்மையும், தீமையும் சரிசமமாக இருக்கும் மாதம்  இது.
பரிகாரம் : சுவாதி நட்சத்திரத்தன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக். 29, 30


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !