மஹாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
மும்பை: வரும் 16ம் தேதி முதல் மஹாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. இதனை திறக்க வேண்டும் என பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. போராட்டமும் நடந்தது. இந்த விவகாரத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி - முதல்வர் உத்தவ் தாக்கரே இடையே மோதல் ஏற்பட்டது. கோவில்களை திறப்பது குறித்த விவகாரத்தை பெரிதுபடுத்திய பா.ஜ.,வுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதல்வர் உத்தவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் அனைத்து வழிபாட்டு தலங்களையும், நாளை மறுநாள்(நவ.,16) முதல் திறந்து கொள்ள மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.