பழநியில் தங்கரத புறப்பாடு எப்போது ; பக்தர்கள் எதிர்பார்ப்பு
திண்டுக்கல் : பழநி மலைக்கோயிலில் மீண்டும் எப்போது தங்கரத புறப்பாடு என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் கோயில்கள் பெரும்பாலும் இயல்பு நிலைக்கு வந்து விட்டன.
கொரோனாவுக்கு பின் பிரசித்தி பெற்ற கோயிலான பழநி கோயில் திறக்கப்பட்டாலும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.சூரசம்ஹாரம், திருகல்யாணம் கூட பக்தர்களுக்கு அனுமதியின்றியே நடத்தப்பட்டது. தற்போது பழநி மலைக் கோயில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எல்லா நாட்களும் செயல்படும் தங்கரத புறப்பாடை பார்க்காமல் பக்தர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். தினமும் மலைக்கோயிலில் இரவு 7:00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சி கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியும் தங்கரத புறப்பாடை மட்டும் மீண்டும் செயல்படுத்த வில்லை. தைப்பூசத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் பழநிக்கு படையெடுக்கின்றனர். இவர்களுக்கு தங்கரத புறப்பாடு இல்லை என்பது ஏமாற்றத்திற்குரியதாக உள்ளது. எனவே, மீண்டும் தங்கரத புறப்பாடுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் கூறுகையில், ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. தங்கரத புறப்பாடுக்கு தடை இருப்பது பக்தர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது. அதனைக்காண பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர். எனவே, பக்தர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.