ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதியவர் 5 நாள் உபவாசம்
மேட்டூர்: ஜலகண்டேஸ்வரர் கோவிலில், முதியவர், 5 நாள் உபவாசத்தை தொடங்கினார். கொளத்தூர் அடுத்த பாலவாடியில், ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள, கோவிந்தபாடியை சேர்ந்தவர் குஞ்சப்பன், 74. இவர், அந்த கோவில் வளாகத்தில், 5 நாள் உபவாசத்தை, நேற்று காலை தொடங்கினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: என் மனைவி லட்சுமி. எங்களுக்கு, மூன்று மகன், இரு மகள் உள்ளனர். அவர்களுக்கு மணமாகிவிட்டது. எனக்கு, சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்பட்டது. சமீபகாலமாக, குடும்ப பொறுப்பில் இருந்து விலகி, கோவில்களில் அமர்ந்து, மகாபாரத கதைகள் மூலம், பக்தர்களுக்கு நன்னெறிகளை போதிக்கிறேன். ஏற்கனவே, கோவிந்தபாடி அருகிலுள்ள ஒரு கோவிலில், 3 நாள் உபவாசம் இருந்தேன். தற்போது, அனைத்து மக்களும் நலமுடன் வாழ, ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 5 நாள் உபவாசம் இருக்கிறேன். இந்த நாளில், உணவு, தண்ணீர் உட்கொள்ள மாட்டேன். வரும், 14 காலை உதயமாகும் சூரியனை வழிபட்டு, விரதத்தை முடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.