உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனை வழிபடும் காளை

சிவனை வழிபடும் காளை


ஆறறிவு படைத்தவர்கள் நாம் என பெருமையாக சொல்கிறோம். இருந்தாலும் வாரம் ஒருமுறை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம். ஆனால் ஐந்தறிவு படைத்த காளை மாடு தினமும் இருமுறை சிவனை தரிசிக்கும் அதிசயம் கர்நாடக மாநிலம் மங்களூரு பாண்டேஸ்வரர் கோயிலில் நடக்கிறது.              
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் ஈடுபட்டு சகுனியிடம் தோற்றார். இதனால் பாண்டவர்களின் மனைவியான திரவுபதியை, பலர் முன்னிலையில் துரியோதனன் அவமானப்படுத்தினான். இதற்கு பழி தீர்க்கும் நோக்கில், ‘குருக்ஷேத்திர போரில் துரியோதனனின் தலை உருண்டால் தான் கூந்தலை முடிவேன்’ என அவள் சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஓரிடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பிற்காலத்தில் அங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு ‘பாண்டேஸ்வரர்’  என பெயர் வந்தது.              
சிவபெருமானின் ஜடாமுடி விரிந்து கிடப்பதால் கருவறையைச் சுற்றும் வழக்கம் இக்கோயிலில் கிடையாது. கார்த்திகை திங்கட்கிழமைகளில் ருத்ரயாகம் நடக்கிறது. அப்போது ருத்ராட்சம், வில்வ இலைகள், பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்வர். இதை தரிசிப்பவர்களுக்கு எதிரி பயம் நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.              
இங்கு கோமடத்தில் உள்ள காளை மாடு தினமும் உச்சிக்கால பூஜை, இரவு நடக்கும் அர்த்தஜாமபூஜையில் பங்கேற்க சன்னதிக்கு வருகிறது. படியில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர். அப்போது காளை வெளி விடும் மூச்சுக்காற்று நம் உடம்பின் மீது பட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்.              
நந்தா தீபம் என்னும் ஒன்பது கண்களுடன் உள்ள பெரிய விளக்கு கோயிலில் எரிகிறது. இதில் எண்ணெய் விட்டால் கிரக பீடை  விலகும். இரவில் 8:00 மணிக்கு நடக்கும் ரங்காபூஜையில் சன்னதி முழுவதும் தீபமேற்றுகின்றனர்.வெள்ளிக்கிழமையில் ராகுகாலத்தில் நாகதோஷத்தில் இருந்து விடுபட  புற்றில் பால் ஊற்றுகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !