உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் வைகாசி விசாக வழிபாடு

கோவில்களில் வைகாசி விசாக வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலுள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரை முருகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, நேற்று வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பல்வேறு திரவியங்கள் கொண்டு முருகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி, முருகருக்கு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வள்ளி, தெய்வானை சமேதரராய் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளிபாலித்தார். விழாவில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், காலை 10.00 மணிக்கு முருகருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

நிரம்பியது கூட்டம்:  வைகாசி விசாகத்தையொட்டி, பழநிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதனால், பழநி வழித்தட பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொள்ளாச்சி - பழநி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால், கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களில், கூட்ட நெரிசல் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

கிணத்துக்கடவு: பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு, பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரிவெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியர், சஷ்டி குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில், 30 பேர் காலை 10.30 மணிக்கு பால்குடம் எடுத்தனர். பக்தர்கள் பால்குடத்தை தலையில் வைத்துக் கொண்டு, காவடி எடுத்தப்படியே கிரிவலத்தை துவக்கினர். அடிவாரத்தில் கிளம்பி, பொள்ளாச்சி ரோடு வழியாக சிவலோநாதர் கோவிலுக்கு வந்து, அங்கு சிவனை வழிப்பட்டனர். பின், மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். மலைமேல் சென்று வேலாயுதசாமிக்கு பால்குடத்தில் உள்ள பாலை வைத்து பாலாபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜைகள் செய்தனர். இப்பூஜையில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !