குமரி பகவதியம்மனுக்கு ஆறாட்டு விழா
கன்னியாகுமரி : வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நடந்தது. உலக புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி 10 நாட்களும் சிறப்பு அபிஷேகம், வாகனபவனி, சப்பரபவனி, நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் திருவிழாவான நேற்று காலை கன்னியாகுமரி கடலில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 8.30க்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க வீதிகளில் வலம் வர செய்தனர். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் கிழக்கு வாசல் எதிரே கடற்கரையை யொட்டி அமைந்துள்ள ஆறாட்டு மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனர். அங்கு அம்மனுக்கு களப அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவ அம்பாள் மற்றும் மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளையும் கடலுக்கு எடுத்து சென்று ஆறாட்டினர். கோயில் மேல்சாந்தி ராதாகிருஷ்ணன் போற்றி, கீழ்சாந்திகள் சீனிவாசன் போற்றி, பத்மநாபன் போற்றி ஆகியோர் அம்பாளை கடலில் ஆறாட்டினர். பின்னர் அம்பாள் கோயிலுக்கு எடுத்து சென்று பூஜைகள் நடத்தினர். அதன்பின் கோயில் கொடி இறக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.