திருமலையில் ஒரு வாரத்தில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
நகரி:நாடெங்கிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், கடந்த வாரத்தில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். கடந்த, 8ம் தேதி வெள்ளி முதல் நேற்றிரவு (திங்கள்) வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் தினமும் குவிந்திருப்பதைக் காண முடிகிறது. திருமலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களின் வரிசை, கோவிலுக்கு வெளியிலும் நீண்டுள்ளது. பாதயாத்திரையாக நேற்று 25 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு வந்துள்ளனர். இலவச தரிசனத்திற்கு, 10 மணி நேரம், பாத யாத்திரையாக வருபவர்களுக்கு, 4 மணி நேரம், 300 ரூபாய் சிறப்பு நுழைவுக் கட்டண டோக்கன் பெற்றுள்ளவர்கள், 3 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்க வேண்டும் என, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், தங்கும் விடுதிகள் கிடைக்காத பக்தர்கள், விடுதி வளாகங்கள், சாலை ஓரங்களில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தையொட்டி கோவிலில் மூலவரை தரிசிக்க பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, தொலைதூர தரிசனம் அமல்படுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் வரை பக்தர் கூட்டம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.