உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் இணையதளத்தில் 18 புராணங்கள்- புதிய பகுதி!

தினமலர் இணையதளத்தில் 18 புராணங்கள்- புதிய பகுதி!

தினமலர் இணையதளத்தில் கோயில்கள் பகுதியில்18 புராணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனசில் பதியும். ஸத்யம் வத (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்மபுத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.

வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் கண்ணாடி என்று புராணங்களைச் சிறப்பிப்பர். புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள்.வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன. மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது.

இது குறித்த முழு விவரஙகளை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !