கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது: அமைச்சர்
சென்னை: கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது எனவும், கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவைக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை நிர்ணயிக்கப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக பதவியேற்று 55 நாட்களில் தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான ரூ.520 கோடி மதிப்பிற்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோயில் இடங்களில் உள்ள கடைகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிதாக வாடகைக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அறநிலையத்துறை பணியாளர்கள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனக் கூறியிருந்தார்.