கோவில் அதிகாரிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை
சென்னை:பணியாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் அலுவலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத் துறைகமிஷனர் குமரகுருபரன் எச்சரித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை இணை, துணை, உதவி கமிஷனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கோவில்களில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என சட்டசபையில், முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, யாராவது வயது வரம்பை மீறி, நீண்ட காலமாக பணிபுரிந்தாலும், அவர்கள் தினசரி சம்பளத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
அனுமதி கடிதம் தேவைப்படும் பட்சத்தில், அதற்கான முன்மொழிவுகளை, தலைமையகத்திற்கு அனுப்பவும். அவர்களுக்கு அலுவலர்கள் மூலம், எந்த இடையூறும் இருக்க கூடாது.இதையும் மீறி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு, சம்பந்தப்பட்ட இணை, உதவி கமிஷனர்கள் பொறுப் பேற்க வேண்டும். எனவே, பணியாளர்களுக்கு பாதகமான செய்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இது தொடர்பாக, அந்தந்த கோவில் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.