அமர்நாத் பனி லிங்க தரிசன யாத்திரை: பலத்த பாதுகாப்புடன் துவக்கம்!
ஜம்மு: காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை, நேற்று முறைப்படி துவங்கியது. ஜம்முவில் உள்ள முகாமிலிருந்து, நேற்று முதலாவது அணியினர், பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றனர்.ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமிலிருந்து, முதல் அணியாக, 2,294 பேர் அதிகாலை புறப்பட்ட போது, காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் நவாங் ரிக்ஜின் ஜோரா மற்றும் முதல்வரின் அரசியல் ஆலோசகர் தேவிந்தர் ராணா ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.பனி லிங்க தரிசனத்திற்கு செல்லும் முதல் அணியில், 1,469 ஆண்கள், 476 பெண்கள், 108 குழந்தைகள், 241 சாதுக்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், 51 பஸ்கள் மற்றும் 18 இலகு ரக வாகனங்கள் என, 69 வாகனங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றனர்.யாத்திரை தொடர்பாக, அமைச்சர் நவாங் ரிக்ஜின் ஜோரா கூறியதாவது:இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனி லிங்க தரிசன யாத்திரை, துவங்கி விட்டது. அனைத்து பக்தர்களும், எந்த விதமான பிரச்னையும் இல்லாமல், தரிசனம் முடித்து திரும்ப வேண்டும் என, நாங்கள் பிரார்த்திக்கிறோம். யாத்திரைக்காக, இந்த ஆண்டு, 3.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று துவங்கும் யாத்திரை, ஆகஸ்ட் 2ம் தேதி முடிவுக்கு வரும். யாத்திரை சுமுகமாக நடைபெறுவதற்காக, 57 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் நவாங் ரிக்ஜின் ஜோரா கூறினார்.